1.42 கோடி நத்தம் நில ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றம்
1.42 கோடி நத்தம் நில ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றம்
ADDED : மார் 11, 2024 04:39 AM
சென்னை : தமிழகத்தில், 1.42 கோடி நத்தம் நில ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக, நில அளவைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நிலம் தொடர்பான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனால், இதில் குடியிருப்பு மற்றும் விவசாய பயன்பாட்டில் இருந்த நத்தம் நிலங்கள் தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படாமல் இருந்தன.
அதனால், வருவாய்த் துறையின், 'தமிழ்நிலம்' தகவல் தொகுப்பில், நத்தம் நில விபரங்களை சரிபார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட நிலையில், அது தொடர்பான பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், நத்தம் நிலங்கள் பரிமாற்றத்தில் உண்மைத் தன்மையை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, நத்தம் நில ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது.
இதுகுறித்து, நில அளவைத் துறை இயக்குனர் பி.மதுசூதன் ரெட்டி, அனைத்து கலெக்டர்களுக்கும் எழுதிய கடிதம்:
தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள், 2014 முதல் நடந்து வருகின்றன. இதில், தற்போதைய நிலவரப்படி, 1.42 கோடி நத்தம் நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த டிஜிட்டல் ஆவணங்கள், பல்வேறு கட்ட சரிபார்ப்புக்கு பின், தற்போது தமிழ்நிலம் தகவல் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இ - சேவை இணையதளம் வாயிலாக, தமிழ்நிலம் தகவல் தொகுப்பில், நத்தம் நில ஆவணங்களை பொதுமக்கள் பார்க்கலாம்.
இ - சேவை மையங்கள் வாயிலாக, நத்தம் நில பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர் முதல் பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இப்புதிய வழிகாட்டுதல்களை அலுவலர்கள் கடைபிடிப்பதை கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். நத்தம் நில பட்டா மாறுதலுக்கு மக்கள், இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதற்காக பொதுமக்களை தாலுகா அலுவலகங்களுக்கு வரும்படி அலைக்கழிக்கக் கூடாது. இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

