கிடங்கு கட்டுவதற்கு ரூ.25 லட்சம் கடன் வழங்குகிறது கூட்டுறவு வங்கி
கிடங்கு கட்டுவதற்கு ரூ.25 லட்சம் கடன் வழங்குகிறது கூட்டுறவு வங்கி
ADDED : ஜூலை 08, 2025 05:11 AM
சென்னை: விளைபொருட்களை சேமித்து பதப்படுத்தவும், மதிப்பு கூட்டி விற்கவும், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, விவசாய குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, 25 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தை, கூட்டுறவு துறை துவக்கி உள்ளது.
இத்திட்டத்தில் கிடங்குகள், 'பேக்கேஜிங்' எனப்படும் சிப்பமிடுதல் அறை, பழுக்க வைக்கும் அறைகள், தளவாட வசதிகள், முதல்நிலை பதப்படுத்துதல் மையம் போன்றவற்றை அமைக்கலாம்.
இதனால், நல்ல விலை கிடைக்கும் வரை, விளைபொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியும். இதற்கு, விண்ணப்பிக்கும் குழு உறுப்பினர்கள் அனைவரும், வங்கியின் இணை உறுப்பினராக சேர வேண்டும்.
உழவர் உற்பத்தியாளர் குழுக்களின், குறைந்தபட்ச மூலதனம், 5 லட்சம் ரூபாயாகவும், விற்று முதல், 25 லட்சம் ரூபாயாகவும் இருக்க வேண்டும். கடன் பெறும் திட்டச்செலவு, விற்று முதலை விட, அதிகம் இருக்கக்கூடாது.
உறுப்பினர் குறைந்தது, இரு ஆண்டுகளுக்கு, பொருளை கையாளும் அறிவும், அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். பத்து சதவீத விளிம்பு தொகையை செலுத்த, நிதி ஆதாரம் இருக்க வேண்டும். நேர்மறை நிகர மதிப்பு இருக்க வேண்டும்.
விவசாய குழு மற்றும் சுய உதவி குழுக்களில் கடன் வாங்குவோர், தொழிலில் குறைந்தது, இரு ஆண்டுகளுக்கு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இவை, 10 சதவீத விளிம்பு தொகை செலுத்த, போதிய நிதி ஆதாரத்தை கொண்டிருக்க வேண்டும்.
கடனின் அதிகபட்ச தொகை, 25 லட்சம் ரூபாய். திட்ட மதிப்பில், 90 சதவீதம் கடன் வழங்கப்படும். 50,000 ரூபாய் வரை பிணை தேவையில்லை.
அதற்கு மேல் இயந்திரங்களின் அடமானம் அல்லது சொத்து அடமானம் தர வேண்டும். வட்டி, 9 சதவீதம் வரை இருக்கும். கடனை அதிகபட்சம், மாதாந்திர அடிப்படையில், ஐந்து ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும்.

