கூட்டுறவு வங்கியில் 'கிரெடிட் கார்டு' சேவை ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்பு
கூட்டுறவு வங்கியில் 'கிரெடிட் கார்டு' சேவை ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்பு
ADDED : ஜூலை 24, 2025 10:33 PM
சென்னை:தமிழகத்தில் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு, 'கிரெடிட் கார்டு' எனப்படும், கடன் அட்டை சேவை வழங்குவதற்கு ரிசர்வ் வங்கியிடம், கூட்டுறவு துறை அனுமதி கேட்டு உள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, சென்னையில், 51 கிளைகளுடனும், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 933 கிளைகளுடனும் செயல்படுகின்றன.
இதுதவிர, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் கடன் வழங்குகின்றன.
மாநில மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகள், தேசிய மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக, ஐ.எம்.பி.எஸ்., எனப்படும் உடனடி பணப்பரிமாற்ற சேவை, ஏ.டி.எம்., சேவை, ஆர்.டி.ஜி.எஸ்., - என்.இ.எப்.டி., இணையதள வங்கியியல் சேவை, மொபைல் போன் வங்கியியல் சேவை, கியு.ஆர்., கோடு பண பரிமாற்ற சேவை, 'ரூபே கார்டு' போன்ற 'டிஜிட்டல்' வங்கியியல் சேவைகளை வழங்குகின்றன.
அடுத்ததாக, கிரெடிட் கார்டு சேவையும் துவக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூட்டுறவு வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு, கிரெடிட் கார்டு சேவையை துவக்குவதற்கு, ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி விரைவில் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கிடைத்ததும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப கடன் வழங்கும் வகையில், கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும். இதனால், கூட்டுறவு வங்கிகளின் பண பரிவர்த்தனை அதிகரிக்கும்; வட்டி வருவாயும் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.