ரூ.17,000 கோடி பயிர்க்கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு
ரூ.17,000 கோடி பயிர்க்கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு
ADDED : மே 03, 2025 08:39 PM
சென்னை:கூட்டுறவு வங்கிகளில், 17,000 கோடி ரூபாய் பயிர்க்கடன், 3,000 கோடி ரூபாய் கால்நடை வளர்ப்பு கடன் வழங்க, கூட்டுறவு துறை உத்தரவிட்டுஉள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பிரிவுகளில், கடன்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, விவசாயிகளுக்கு பயிர்க்கடன், 7 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்திற்குள், கடனை செலுத்திவிட்டால், வட்டி முழுதுமாக தள்ளுபடி செய்யப்படும். இதே நடைமுறை, கால்நடை வளர்ப்பு பிரிவு கடனுக்கும் பின்பற்றப்படுகிறது.
கூட்டுறவு நிறுவனங்களில், நடப்பு நிதியாண்டில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, 1.10 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்க, திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், சட்டசபையில் சமீபத்தில் அறிவித்தார்.
இதையடுத்து, ஒவ்வொரு பிரிவிலும் வழங்க வேண்டிய, கடன் தொகை விபரங்களை, கூட்டுறவு துறை தயாரித்து வருகிறது.
அதன் அடிப்படையில், 17,000 கோடி ரூபாய் பயிர்க்கடன், 3,000 கோடி ரூபாய் கால்நடை வளர்ப்பு பிரிவு கடன் வழங்க, கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், 17.37 லட்சம் விவசாயிகளுக்கு, 15,692 கோடி ரூபாய் பயிர்க்கடன், 4.43 லட்சம் பேருக்கு, 2,645 கோடி ரூபாய் கால்நடை வளர்ப்பு பிரிவு கடன்கள் வழங்கப்பட்டன.