சமையல் எண்ணெய் தயாரிப்பில் களமிறங்குது கூட்டுறவு துறை
சமையல் எண்ணெய் தயாரிப்பில் களமிறங்குது கூட்டுறவு துறை
ADDED : ஆக 22, 2025 11:35 PM
சென்னை:விவசாயிகளிடம் இருந்து நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை நேரடியாக கொள்முதல் செய்து, சமையல் எண்ணெய் தயாரித்து விற்க கூட்டுறவு துறை திட்டமிட்டு உள்ளது.
தமிழகத்தில் நிலக்கடலை, தேங்காய், எள் போன்ற எண்ணெய் வித்துக்களின் சாகுபடி அதிகம் உள்ளது. இந்த எண்ணெய் வித்துக்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து, தரமான கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை தயாரித்து, கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக விற்க, கூட்டுறவு துறை தீர்மானித்துள்ளது.
இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில், 10 லட்சம் ரூபாய், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் தலா, 15 லட்சம் ரூபாய், ராணிப்பேட்டை ஆற்காட்டில், 15 லட்சம் ரூபாயில் எண்ணெய் உற்பத்தி அலகுகள் அமைக்கும் பணியில் கூட்டுறவு துறை ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உள்நாட்டில் எள், நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடையவும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்று, பல்வேறு வேளாண் பொருட்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
எனவே, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக எண்ணெய் வித்துக்களை வாங்கி, தரமான மதிப்பு கூட்டப்பட்ட எண்ணெய் வகைகளை தயாரித்து, அதிகளவில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு - மூன்று மாவட்டங்களுக்கு, தலா ஒரு எண்ணெய் உற்பத்தி அலகு அமைக்கப்படும். இதனால், விவசாயிகளும், மக்களும் பயன் பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

