வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் கூட்டுறவு சிறப்பு கடன் முகாம்
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் கூட்டுறவு சிறப்பு கடன் முகாம்
ADDED : டிச 05, 2024 11:53 PM
சென்னை : 'புயலால் பாதிக்கப்பட் சிறு வணிகர்கள் பயன் பெற, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, வரும், 12ம் தேதி வரை சிறப்பு சிறு வணிக கடன் முகாம் நடத்தப்படும்' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சிறு வணிகர்களுக்கு, சிறப்பு சிறு வணிக கடன் முகாம் நடத்தப்பட உள்ளது.
கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தகுதியானவர்களுக்கு குறைந்த வட்டியில், 10,000 முதல், 1 லட்சம் ரூபாய் வரை சிறு வணிக கடன் வழங்கப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த கார்டு உடைய தெரு வியாபாரிகள், சிறுவணிகர்கள், பூ, பழம், காய்கறி வியாபாரிகள், மீனவர்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்டோர் பயன்பெற தகுதி உடையவர்கள்.
இந்த சிறப்பு சிறு வணி கடன் திட்ட முகாம், இம்மாவட்டங்களில் இன்று முதல், 12ம் தேதி வரை நடக்கும். இதில், சிறு வணிகர்கள் உரிய ஆவணங்கள் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.