பொதுமக்கள் விரும்பும் பொருட்கள் இல்லை கூட்டுறவு அங்காடிகள் முடங்கும் அபாயம்
பொதுமக்கள் விரும்பும் பொருட்கள் இல்லை கூட்டுறவு அங்காடிகள் முடங்கும் அபாயம்
ADDED : டிச 21, 2025 12:45 AM
சென்னை: முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பப்படும் மருந்துகளுக்கு பணம் தர தாமதம் செய்வதால், எப்.எம்.சி.ஜி., எனப்படும் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களை, கூட்டுறவு நுகர்வோர் இணையம் அனுப்பாததால், கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 45 மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் உள்ளன. இவை, 24 பல்பொருள் அங்காடிகள், 225 சிறு பல்பொருள் அங்காடிகள், 381 கூட்டுறவு மருந்தகங்களை நடத்துகின்றன.
புகார் இந்த அங்காடிகளில் விற்கப்படும் குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு வகைகள், பவுடர், சத்து மாவு உள்ளிட்ட, விரைவாக விற்பனையாக கூடிய நுகர்பொருட்களை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, கூட்டுறவு இணையம் மொத்தமாக கொள்முதல் செய்து, மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலைகளுக்கு அனுப்புகிறது.
தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்க, 1,000 முதல்வர் மருந்தகங்களை, அரசு துவக்கி உள்ளது. இதில், 500 மருந்தகங்களை, கூட்டுறவு அங்காடிகளும், 500ஐ தொழில் முனைவோரும் நடத்துகின்றனர்.
மருந்தகங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளையும், கூட்டுறவு விற்பனை இணையமே கொள்முதல் செய்து அனுப்புகிறது.
இதற்கான பணத்தை வழங்க, பண்டகசாலைகள் தாமதம் செய்வதால், விரைவாக விற்பனையாகும் நுகர்பொருட்களை, கூட்டுறவு இணையம் சரிவர அனுப்புவதில்லை. இதனால், அங்காடிகளில் விற்பனை பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு பண்டகசாலை பணியாளர்கள் கூறியதாவது:
இணையம் கொள்முதல் செய்து தந்தாலும், அதற்கு உரிய பணத்தை, சம்பந்தப்பட்ட பண்டகசாலைகள் சரியான நேரத்தில் தாமதமின்றி வழங்குகின்றன. பொருட்களை வாங்கி தருவதற்காக, இணையத்திற்கு, 1 சதவீத கமிஷனும் தரப்படுகிறது.
மருந்தகங்களில் வாடிக்கையாளர் வருகை குறைவாக இருப்பதால், மருந்துகள் விற்பனையில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், அதற்கு உரிய பணம் தர தாமதமாகிறது. ஆனால், கூட்டுறவு இணைய அதிகாரிகள், 'மருந்துக்கு உடனே பணம் தந்தால் தான், நுகர்பொருட்கள் அனுப்பப்படும்' என்கின்றனர்.
ஒரு அங்காடியின் விற்பனையில், 40 - 50 சதவீதம் நுகர்பொருட்களை சார்ந்து தான் உள்ளது. இந்த பொருட்கள் அங்காடிகளில் இல்லை என்றால், விற்பனை பெரிதும் பாதிக்கப்படுகிறது; வாடிக்கை யாளர்கள் வருகையும் குறைகிறது.
முடங்கும் நிலை இதே நிலை தொடர்ந்தால், பல்பொருள் அங்காடிகள் முடங்கும் நிலை உருவாகும். எனவே, தாமதமின்றி பொருட்களை அனுப்ப வேண்டும்.
இல்லையெனில், பண்டக சாலைகளே நேரடியாக வாங்க அனுமதிக்க வேண்டும். இதனால், 1 சதவீத கமிஷன் செலவும் மிச்சம்; சரியான நேரத்தில் பொருட்களும் கிடைக்கும்.
இதில் தவறுகளை தடுக்க, பண்டகசாலை செயல்பாட்டை, இணையதளத்தில் எங்கிருந்தபடியும் உயரதிகாரிகள் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

