விண்ணப்பித்த நாளிலேயே பயிர் கடன் வழங்க தனி 'சாப்ட்வேர்' உருவாக்குகிறது கூட்டுறவு துறை
விண்ணப்பித்த நாளிலேயே பயிர் கடன் வழங்க தனி 'சாப்ட்வேர்' உருவாக்குகிறது கூட்டுறவு துறை
ADDED : ஜூன் 22, 2025 01:10 AM
சென்னை:தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விண்ணப்பித்த நாளிலேயே விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட உள்ளது. இதற்கான மென்பொருள் உருவாக்கும் பணி துவங்கியுள்ள நிலையில், அத்திட்டம் தர்மபுரியில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன; இவை, விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை கடன் வழங்குவது, உரம் விற்பது போன்ற பணிகளை மேற்கொள்கின்றன.
அச்சங்கங்களில், 3 லட்சம் ரூபாய் வரை பயிர் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு, சங்கங்களில் விண்ணப்பித்த பின், ஆவணங்களை பரிசீலிப்பது உள்ளிட்ட பணிகளை செய்து, கடன் வழங்க ஒரு வாரத்துக்கு மேலாகிறது. இதனால், விவசாயிகள் குறித்த காலத்தில் பணம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
கணினிமயம்
இதையடுத்து, 'தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கி கணக்கில் பயிர் கடன் வழங்கும் திட்டம் துவக்கப்படும்' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், சட்டசபையில் அறிவித்திருந்தார்.
தற்போது, அத்திட்டத்திற்கான மென்பொருள் உருவாக்கும் பணியை, தமிழக மின் ஆளுமை முகமை வாயிலாக, கூட்டுறவு துறை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொடக்க கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. அந்த சங்கங்களில் பயிர் கடனுக்கு இணையதளத்தில் விண்ணப்பம் செய்யும்போது, விவசாயிகளின், 'ஆதார்' எண் கட்டாயம் கேட்கப்படும்.
அந்த எண்ணை பயன்படுத்தி, 'டி.என்.கிரெய்ன்ஸ், தமிழ் நிலம்' இணையதளங்களில் இருந்து விவசாயிகளின் நிலம் தொடர்பான ஆவணங்கள் பெறப்படும்.
மாநிலம் முழுதும்
அவை பரிசீலிக்கப்பட்ட பின், விண்ணப்பித்த அன்றே கடன் வழங்க ஒப்புதல் அளித்து, விவசாயி வங்கி கணக்கில் கடன் தொகை செலுத்தப்படும். இதனால், வீட்டில் இருந்தபடியே விண்ணப்பித்து, கடன் தொகை பெறலாம். அலைச்சல், நேர விரயம் போன்ற சிரமங்கள் இருக்காது.
இத்திட்டம், முதற்கட்டமாக சோதனை ரீதியாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 131 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. பின், மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.