தமிழகத்தில் விமான இணைப்புகளுக்கு அநீதி இழைப்பதை சரி செய்யவும்: ராஜா
தமிழகத்தில் விமான இணைப்புகளுக்கு அநீதி இழைப்பதை சரி செய்யவும்: ராஜா
ADDED : ஆக 16, 2025 02:00 AM
சென்னை:''தமிழகத்திற்கு பெரிய விமானங்களின் சேவையை அறிமுகம் செய்வதை, வேண்டுமென்றே நிறுத்திவிட்டு, புதிய விமான நிலையங்களை திறப்பதன் பயன் என்ன' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தலையிட்டு, தமிழகத்தில் விமான போக்குவரத்தில் இழைக்கப்படும் அநீதியை சரிசெய்ய வேண்டும். சென்னை - திருச்சி மற்றும் சென்னை - துாத்துக்குடி செல்லும், ஒவ்வொரு 'இண்டிகோ' நிறுவனத்தின் விமான இருக்கைகளும் முழுதும் நிரம்பி இருந்தாலும், 'ஏ.டி.ஆர்' எனப்படும் குறைந்த இருக்கைகளுடன் கூடிய விமானங்களுக்கு பதில், அதிக இருக்கைகள் உடைய, '320' விமானத்தை இயக்க மறுக்கிறது.
ஏ.டி.ஆர்., விமானங்கள், மூன்று கட்ட இணைப்பு வழித்தடங்களுக்கு வேண்டுமானாலும் சரியாக இருக்கலாம். நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும், தமிழகத்திற்கு சரிப்பட்டு வராது.
தமிழகத்திற்குள் உள்ள மாவட்டங்களை இணைக்கும் விமானங்கள், சிறிய ஏ.டி.ஆர்., விமானங்களாக இருப்பது குறித்தும், பெரிய விமானங்களாக இல்லாதது குறித்தும், தொழில் துறையினர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, பல முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய விமான போக்குவரத்து அமைச்சரிடமும் தெரிவித்துள்ளேன். தமிழக எம்.பி.,க்களும் இதை தெரிவித்துள்ளனர். இருப்பினும், 'பிசி'யாக உள்ள வழித்தடத்தில், இண்டிகோ நிறுவனம் இன்னும் சிறிய விமானத்தை இயக்குவது ஏன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.