UPDATED : ஆக 08, 2015 12:20 AM
ADDED : ஆக 07, 2015 12:05 AM

மதுரை:''தமிழ்நாட்டில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் நன்கு வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும் ஊழல் மிகுந்ததாகவும் உள்ளது. ஊழலை ஒழிக்க அனைத்து சமுதாய இளைஞர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும்,'' என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
மதுரையில் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை மற்றும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் இணைந்து 'தேவேந்திரர் குல வேளாளர்' என்ற பெயரை அரசு ஆணையாக பெறுவதற்கான பிரதிநிதிகள் மாநாட்டை நடத்தியது.
இதில் பங்கேற்று அமித்ஷா பேசியதாவது: இறைவன் அருளால் மரியாதைக்குரிய இந்த மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. எனக்கும், தேவேந்திர குல வேளாளருக்கும் எவ்வாறு உறவு ஏற்பட்டது என்பதை விளக்க கடமைப்பட்டுள்ளேன். மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜயினி அருகே நடந்த பசு பாதுகாப்பு மாநாட்டில் காசி சர்வசாலை மாணவர் பசுவை தெய்வமாக வணங்கும் கட்டுரை ஒன்று சமர்ப்பித்தார். அதில் தென் பகுதியில் உள்ள தேவேந்திரர் குல மக்கள் பசுவை தெய்வமாக வணங்கினர் என்பது இடம் பெற்றது. அக்கூட்டத்தில் தேவேந்திரர் குல மக்கள் குறித்து பேசினேன்.
மன்னிப்பு கேட்கிறேன்: ஜூலை 15ம் தேதி ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த மாநாட்டில் நாங்கள் தேவேந்திரர் குலத்தை சேர்ந்தவர்கள் என அறிவிக்க வேண்டும். சலுகைகள் வேண்டாம் என கவுரவமாக கேட்டனர். நாடு முழுவதும் தங்கள் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் என அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு வரும் நிலையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள மக்களுக்கு இந்நிகழ்ச்சி வழிகாட்டியாக உள்ளது.
இம்மாநாட்டில் தான் ஜாதிகளை பயன்படுத்தி பிரிவினையை ஏற்படுத்துவதா அல்லது நல்ல பல விஷயங்களை கூறி அவர்களை ஒன்றிணைப்பதா என்ற சிந்தனை பிறந்துள்ளது. இச்சிந்தனை மாற்றத்திற்கான துவக்கமாக மதுரை மாநாடு அமைந்துள்ளது.இம்மாநாட்டில் நீங்கள் பிரகடனப்படுத்திய தேவேந்திரர் குலம் என்பதை பிரதமர் நரேந்திர மோடியிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பேன். நிதின்கட்காரி தலைவராக இருந்த போதும் இதே கோரிக்கையை பா.ஜ., ஆதரித்தது. தற்போது நான் தலைவராக இருந்தும் ஆதரிக்கிறேன்.
மீனாட்சி அருள்: மதுரை வந்து மீனாட்சி அம்மன் அருள் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். நான் ஏழாம் வகுப்பு படித்தபோது ஒரு முறை இங்கு வந்துள்ளேன். இங்கு அரசியல் பேச விரும்பவில்லை.தமிழ்நாட்டில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் நன்கு வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும் ஊழல் மிகுந்ததாகவும் உள்ளது. வளர்ச்சியும், ஊழலும் ஒன்றாக இருக்க முடியாது. இந்த ஊழலில் இருந்து விடுதலை பெற்றால் தமிழகம் முதல் மாநிலமாக மாறும்.
இங்கு மீனாட்சி அம்மன் கோயிலை ஏன் குறிப்பிட்டேன் என்றால் நம் முன்னோர்கள் உலகமெல்லாம் சுற்றி செல்வங்களை சேர்த்து இங்கு வந்து இக்கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு இக்கோயில் தான் சாட்சி. நாட்டில் 10 மாநிலங்கள் சேர்ந்து நினைத்தாலும் இக்கோயிலை கட்ட
முடியாது.
அனைத்து சமுதாயங்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ஊழலற்ற மாநிலமாக மாற்ற இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்க வேண்டும். மத்தியில் பிரதமர் மோடியின் ஆட்சி பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. அதையெல்லாம் பட்டியலிட முடியாது. அவரது செயல்பாடால் நாட்டிற்கு மிகப்பெரிய கவுரவத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது சாதனை அரசு தொடர உங்களின் ஆசி எப்போதும் வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியில் பேசிய அவரது பேச்சை பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா மொழிபெயர்த்தார்.
துளிகள்...
* அமித்ஷாவிற்கு மீனாட்சி அம்மன் படமும், கிளியும் வழங்கப்பட்டது.
* அமித்ஷாவை குறிப்பிடும் போது 'சர்வஸ்ரீ' என அடைமொழியுடன் குறிப்பிட்டனர்.
* சுதேசி இயக்க இணை அமைப்பாளர் சீனிவாசன் பேசுகையில், அமித்ஷாவை குஜராத்தின் 'சிங்கம்-2' எனவும், பிரதமர் மோடியை 'சிங்கம் -1' என்றும் குறிப்பிட்டார்.
* 'தேவேந்திரர் குல வேளாளர்' என குறிப்பிட வேண்டும் என பிரகடனம் வெளியிட்டனர். அதில் அமித்ஷா முதலாவதாக கையெழுத்திட்டார்.
* யாதவர், நாயுடு, ரெட்டியார், நாடார், தேவர் சமுதாய நிர்வாகிகள், பிரமுகர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
