அனைத்து மத்திய சிறைகளிலும் ஊழல், முறைகேடு * மதுரை அதிகாரிகள் மட்டும் பலிகடாவாக்கப்பட்ட பின்னணி 'ஷாக்' தரும் மாநில தணிக்கை ஆய்வறிக்கை
அனைத்து மத்திய சிறைகளிலும் ஊழல், முறைகேடு * மதுரை அதிகாரிகள் மட்டும் பலிகடாவாக்கப்பட்ட பின்னணி 'ஷாக்' தரும் மாநில தணிக்கை ஆய்வறிக்கை
ADDED : ஜன 02, 2025 11:05 PM
தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளிலும் 2016 - 21 வரையிலான காலத்தில் ஊழல், முறைகேடு நடந்திருப்பது தணிக்கை ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் மதுரை, நெல்லை, கடலுார் சிறைகளில் மட்டும் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டிய பின்னணியில் உயர் அதிகாரிகள் 'அரசியல்' இருப்பதும், கீழ்நிலை அதிகாரிகள் பலிகடாவாக்கப்பட்டதும் தெரிந்தது.
தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. இங்கு கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை அரசு துறைகளுக்கு இலவசமாக வழங்கி சேவைதுறையாக செயல்பட்டு வருகிறது.
இச்சிறைகளில் மதுரை, நெல்லை, கடலுார் மத்திய சிறைகளை மட்டும் மாநில தணிக்கை துறையினர் 'ஆழமான' ஆய்விற்கு எடுத்துக் கொண்டனர்.
இந்த மூன்று சிறைகளில் இருந்து மட்டும் கைதிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் எந்தெந்த அரசுத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.
இதர மத்திய சிறைகளை அவ்வாறு ஆய்வு செய்யாமல் சம்பிரதாய ஆய்வு நடத்தியுள்ளனர். இது ஒரு தலைப்பட்சமாகவும், சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையிலும் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் மாநில தலைமை தணிக்கையாளரின் ஒரே அறிக்கையில் மதுரை, நெல்லை, கடலுார் சிறைகளிலும் ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் 2019 - 20, 2020 - 21 காலக்கட்டத்தில் பொருட்களை அரசு துறைகளுக்கு அனுப்பாமலும், கைதிகளுக்கு கூடுதல் சம்பளம் கொடுத்ததாகவும் உள்ள குற்றச்சாட்டிற்கு சென்னை ஐகோர்ட் கடந்தாண்டு டிச., 12ல் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.
இதனால் தணிக்கை ஆய்வறிக்கை அடிப்படையில் மதுரை சிறை அதிகாரிகளாக இருந்தவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதே சமயம் ஊழல் முறைகேட்டிற்குள்ளான நெல்லை, கடலுார் சிறைகளில் பெயரளவில் கூட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்யவில்லை.
ரூ.5.57 கோடி இழப்பு
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிறை துறையிடம் கேட்டு பெற்ற விபரங்கள் குறித்து, ஆதாரங்களுடன் நமது நிருபரிடம் சமூக ஆர்வலர் கூறியதாவது:
மதுரை சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களை 17 அரசு துறைகளுக்கு அனுப்பாமல் முறைகேடு செய்ததாக தணிக்கை ஆய்வு கூறுகிறது. அதேசமயம் நெல்லை சிறையில் இருந்து 27 துறைகளுக்கும், கடலுார் சிறையில் இருந்து ஏழு துறைகளுக்கும் அனுப்பாமல் முறைகேடு நடந்துள்ளது.
இந்த மூன்று சிறைகளிலும் மொத்தம் 5.57 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை சிறை அதிகாரிகள் மீதும், ஒப்பந்ததாரர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால் நெல்லை, கடலுார் மத்திய சிறைகளில் நடந்த ஊழல் குறித்து இதுவரை எந்த விசாரணையும் செய்யவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை சென்னை ஐகோர்ட்டும், நெல்லை, கடலுார் லஞ்ச ஒழிப்புத்துறையும் கண்டுக்கொள்ளவே இல்லை.
இச்சிறைகளில் மட்டும் இல்லாமல் அனைத்து மத்திய சிறைகளிலும் 2016 முதல் 2021 வரை பல்வேறு காலக்கட்டங்களில் ஊழல், முறைகேடு நடந்திருப்பதாகவும் தணிக்கை ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளதை லஞ்சஒழிப்புத்துறை கண்டுகொள்ளவில்லை.
விசாரணை தேவை
குறிப்பாக கோவை சிறையில் 2.02 கோடி ரூபாய், புழல் - 1.57 கோடி ரூபாய், திருச்சி - 72.35 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தணிக்கை ஆய்வில் தெரியவந்துள்ளது.
மதுரை சிறை முறைகேடு குறித்து கடந்த டிச., 16ல் சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடந்தபோது 'லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் திருப்தி இல்லை' என, கருத்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கூறினார்.
சிறை காவலர்கள் கூறியதாவது: அனைத்து மத்திய சிறைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை முழுமையாக விசாரித்தால் ஊழல், முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி., அபய்குமார் சிங் உத்தரவிட வேண்டும்.
மதுரை சிறையில் மட்டும் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஐகோர்ட்டை நம்ப வைத்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரை வழக்குப்பதிவு செய்ய வைத்த பின்னணியில் சில அதிகாரிகளின் துாண்டுதல்தான் காரணம்.
சிறைகளில் அதிகாரிகள் இடையே, 'ஈகோ' பிரச்னை இருந்து வருகிறது. இதனால் குறிப்பிட்ட அதிகாரியை சிக்க வைக்கும் 'அரசியலில்' அவர்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளையும், காவலர்களையும் பலிகடாவாக்கி வருகின்றனர்.
இதற்கு தீர்வு காண சிறைத்துறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் முன்வர வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
-நமது நிருபர் -