அரசின் ஒவ்வொரு அங்கத்திலும் ஊழல் பெருகியுள்ளது: ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை
அரசின் ஒவ்வொரு அங்கத்திலும் ஊழல் பெருகியுள்ளது: ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை
ADDED : ஏப் 11, 2025 05:32 AM

சென்னை : 'அரசின் ஒவ்வொரு அங்கத்திலும் ஊழல் பெருகி வருகிறது; அத்தகைய அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதில், செயலற்ற நிலையில் உள்ளோம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடலுாரை சேர்ந்த கணேசன் என்பவர், தேசிய நெடுஞ்சாலை துறையில், பதிவு எழுத்தராக பணிபுரிந்தார். கடந்த, 2016ம் ஆண்டு அக்., 1ல் பணியில் இருந்த போது இறந்தார். அவரின் மனைவி அமுதா, கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி, 2018ல் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. பின், வருமானம், கல்வித்தகுதி உண்மைத்தன்மை சான்றிதழ்கள், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்கும்படி, அமுதாவிடம், 2020ல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தன் மகன் கவுதம் பிளஸ் 1 முடித்து உள்ளதால், அவருக்கு வேலை வழங்கக்கோரி, அமுதா தாக்கல் செய்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, 18 வயதை எட்டிய பின், 2022 நவம்பர், 19ல் வேலை கோரி, கவுதம் விண்ணப்பம் செய்தார்.
'தந்தை இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பின், விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டதாகவும், கருணை அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்' எனக்கூறி, அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
கடந்த, 2023ல் மீண்டும் கருணை அடிப்படையில் வேலை கோரி, கவுதம் அளித்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுதம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 'மனுதாரர் தன் தந்தை இறந்து, மூன்று ஆண்டுக்கு பின், 18 வயதை எட்டியதால், அவரது விண்ணப்பத்தை ஏற்க முடியாது என்ற அரசு தரப்பு வாதம் சரியே.
ஆனால், மூன்று ஆண்டுகள் வரை தேவையின்றி அமுதாவின் விண்ணப்பம் அதிகாரிகளால் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, அமுதா தகுதியானவர் என்பதால், அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும்' என்று, கடந்தாண்டு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுதம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அரசின் ஒவ்வொரு அங்கத்திலும், இன்று ஊழல் பெருகி வருகிறது. இதை ஒப்புக் கொண்டாக வேண்டும். ஊழலின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதில், செயலற்ற நிலையில் இருப்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
கருணை அடிப்படையில் வேலை கோரிய தாயின் விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்காமல், தேவையற்ற முறையில் தாமதம் செய்துள்ளனர். கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரிய நபரிடம், மீண்டும் மூன்று சான்றிதழ்கள் வேண்டும் என்று, அதிகாரிகள் கட்டாயப்படுத்தி உள்ளனர்.
சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் நோக்கத்துடன் மட்டுமே, இந்த செயல் உள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அமுதாவின் தகுதிக்கு ஏற்ப, நான்கு வாரங்களுக்குள் அவருக்கு அதிகாரிகள் வேலை வழங்க வேண்டும். மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.