சீட்டாடிய மாநகராட்சி ஊழியர்கள் கவுன்சிலரின் கணவர் கொதிப்பு
சீட்டாடிய மாநகராட்சி ஊழியர்கள் கவுன்சிலரின் கணவர் கொதிப்பு
ADDED : ஏப் 11, 2025 01:30 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட, தாமிரபரணி நீரேற்று நிலையம், சமாதானபுரத்தில் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு அருகில் உள்ளது. இங்கிருந்து லாரிகள் வாயிலாக மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் அனுப்பி வருகின்றனர்.
ஏழாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் இந்திராவின் கணவரான, தி.மு.க., பிரமுகர் மணி, அவரது வார்டில் உள்ள ஆயிரத்தம்மன் கோவிலுக்கு தண்ணீர் தேவைப்பட்டதால், மாநகராட்சிக்கு போன் செய்துள்ளார். நீண்ட நேரமாக யாரும் போனை எடுக்கவில்லை.
இதையடுத்து, அவர் மாநகராட்சி நீரேற்று நிலையத்திற்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது, பணி நேரத்தில், மாநகராட்சி ஊழியர்கள், நீரேற்று நிலைய வளாகத்தில் அமர்ந்து சீட்டு விளையாடியுள்ளனர்.
அவர்களிடம், 'நான் நீண்ட நேரமாக போன் செய்தும் யாரும் எடுக்கவில்லை. இங்கு சீட்டு ஆடிக் கொண்டிருக்கிறீர்கள்...' என, கேட்க, அதை ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. விரக்தியின் உச்சத்திற்கு சென்ற மணி, தன் அதிருப்தியை வீடியோவாக பதிவு செய்து, மாநகராட்சி ஊழியர்கள் சீட்டு ஆடிய வீடியோவையும் இணையத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோ பரவி வரும் நிலையில், சமூக ஆர்வலர்கள், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்தராவுக்கு வீடியோவை அனுப்பினர். ஆனாலும், இதுவரை ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

