முழுமையாக பரிசீலித்தே விடுவிப்பு அமைச்சர் வழக்கில் வக்கீல் வாதம்
முழுமையாக பரிசீலித்தே விடுவிப்பு அமைச்சர் வழக்கில் வக்கீல் வாதம்
ADDED : மார் 08, 2024 10:55 PM
சென்னை:'வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததில் சட்டவிரோதம் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாதாடினார்.
கடந்த 2006 -11ம் ஆண்டில், அமைச்சராக பதவி வகித்த சாத்துார் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் நண்பருக்கு எதிராக, சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
சட்ட விரோதம் இல்லை
இவ்வழக்கில் இருந்து மூவரையும் விடுவித்து, ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை, மறுஆய்வு செய்யும் விதமாக, தானாக முன்வந்து, உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இரண்டாவது நாளாக நேற்று இந்த வழக்கில் வாதம் நடந்தது.
அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் சார்பில், மூத்த வழக்கறிஞர் முரளிதர் வாதாடியதாவது:
மேல் விசாரணை நடத்தி, கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ததில் சட்டவிரோதம் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கை, கூடுதல் அறிக்கையை முழுமையாக பரிசீலித்த பிறகே, வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதில், எந்த சட்டவிரோதமும் இல்லை.
விடுவிக்க கோரிய மனுவில் தெரிவித்த காரணங்களை, சிறப்பு நீதிமன்றம் முழுமையாக எடுத்துக் கொள்ளவில்லை. சட்டவிதிகளை பின்பற்றாமல், தவறான முடிவுகளை கீழமை நீதிமன்றம் எடுத்திருந்தால், தாமாக முன்வந்து மறுஆய்வு செய்யலாம். ஆனால், இரண்டு அறிக்கைகளையும் முழுமையாக ஆராய்ந்துள்ளது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
தள்ளி வைப்பு
அமைச்சரின் மனைவி தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ''சொத்துக்கள் குறித்த விளக்கத்தை, லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கில் கொள்ளவில்லை,'' என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் வாதங்கள் முடிந்ததை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அட்வகேட் ஜெனரலின் வாதத்துக்காக, விசாரணையை, வரும் 27ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.