திருப்பூரில் பயங்கர வெடிவிபத்து; மூவர் பலி; 4 பேர் காயம்; 8 வீடுகள் இடிந்து நாசம்!
திருப்பூரில் பயங்கர வெடிவிபத்து; மூவர் பலி; 4 பேர் காயம்; 8 வீடுகள் இடிந்து நாசம்!
UPDATED : அக் 08, 2024 02:22 PM
ADDED : அக் 08, 2024 01:13 PM

திருப்பூர்: திருப்பூரில் இன்று (அக்.,08) பகலில் நடந்த பயங்கர வெடிச்சம்பவத்தில், மூவர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடித்தது என்ன என்று போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
திருப்பூரை அடுத்த பூலுவபட்டி, பொன்விழா நகரில் இன்று நண்பகல் நேரத்தில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. ஒரு கிலோ மீட்டருக்கு வெடிசத்தம் கேட்டது. பலத்த நில அதிர்வும் ஏற்பட்டது. வெடிவிபத்து நடந்த இடத்தில் அருகில் உள்ள வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இடிந்து விழுந்த வீடுகளுக்குள் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன. குழந்தைகள் உட்பட நால்வர் படுகாயத்துடன் கிடந்தனர். தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெடிச்சம்பவம் நேரிட்ட உடன், போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அருகே உள்ள 8 வீடுகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. தீயணைக்கும் படையினர், சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடய அறிவியல் நிபுணர்கள், வெடித்தது என்ன என்று ஆய்வு செய்கின்றனர். சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் முகாமிட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி கூறியதாவது: கார்த்திக்கின் மனைவி சத்யபிரியா, சத்ய பிரியாவின் சகோதரர் சரவணக்குமார் இவர் கோவில் திருவிழாவுக்கான வெடிகளை தயாரித்துள்ளார். ஒன்பது மாதம் குழந்தை மற்றும் பெண் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண் சத்யபிரியாவாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். அறிவியல் பூர்வ ஆதாரங்கள் திரட்டப்ப்படுகின்றன. சரவணக்குமார் ஈரோட்டில் பட்டாசு தயாரிப்புக்கான லைசென்ஸ் வைத்துள்ளார். ஆனால் இங்கு தயாரித்தது சட்டத்துக்கு புறம்பானது. இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில், சேதமடைந்த வீடுகள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாமல் இங்கு தயாரித்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்