ADDED : மார் 19, 2024 11:21 PM

சென்னை:முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 90 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்து, ஒன்றரை ஆண்டுகளாக, 'டிமிக்கி' கொடுத்த தம்பதியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாக வைத்து, ஹிஜாவு என்ற, நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதை, சென்னையை சேர்ந்த சவுந்தரராஜன்,77; இவரது மகன் அலெக்சாண்டர், 42; மருமகள் மகாலட்சுமி, 38 ஆகியோர் நடத்தி வந்தனர். 12 இயக்குனர்கள், 13 கமிட்டி உறுப்பினர்களும் செயல்பட்டனர்.
இவர்கள், 2020 - 2022ம் ஆண்டுகளில், தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் வட்டியாக, 15,000 ரூபாய் தரப்படும் என அறிவித்து, 1,620 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, இயக்குனர்கள், கமிட்டி உறுப்பினர்கள் என, 20 பேரை கைது செய்துள்ளனர். வெளிநாட்டிற்கு தப்பியுள்ள, முக்கிய குற்றவாளி அலெக்சாண்டரை கைது செய்ய, 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீசாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது.
தொடர் விசாரணையில், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரீஜா, 46 மற்றும் அவரது கணவர் மதுசூதனன்,53 ஆகியோர், சென்னை ஷெனாய் நகரில், 'ஏபிஎம் அக்ரோ' என்ற பெயரில், ஹிஜாவு கிளை நிறுவனத்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது. மேலும், இந்நிறுவனம் வாயிலாகவும், அதிக வட்டி தருவதாக, 2,500 பேரிடம், 90 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளனர்.
இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த மோசடி தம்பதி, கேரளாவில் பதுங்கி இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., பாலநாகதேவிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, ஐ.ஜி., சத்யபிரியா தலைமையிலான போலீசார் விசாரித்து, கேரளாவில் பதுங்கி இருந்த பிரீஜா, மதுசூதனன் ஆகியோரை, இரு தினங்களுக்கு முன் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து நேற்று சிறையில் அடைத்தனர்.

