ADDED : ஆக 29, 2011 01:05 AM

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில், ஓராண்டுக்கு முன் குழந்தையை திருடிய தம்பதியை, மதிச்சியம் போலீசார் கைது செய்தனர்.
தனக்கன்குளம் ஜெயக்குமார் மனைவி லதாவிற்கு, கடந்தாண்டு, அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, லதாவிற்கு உதவுவது போல் நடித்த பெண், குழந்தையை திருடிச் சென்றார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிப்பால் மீண்டும் மருத்துவமனையில் லதா சேர்ந்தார்.
இதற்கிடையே, திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த துர்காதேவி, 30, மருத்துவமனைக்கு பெண் குழந்தையுடன் வந்தார். 'அவர் தன் குழந்தையை திருடிய பெண்ணாக இருக்குமோ' என்ற சந்தேகத்தில், போலீசில் லதா புகார் செய்தார். போலீசார் விசாரித்தபோது குழந்தையை திருடியதை துர்காதேவி ஒப்புக்கொண்டார்.
ஆரோக்கியராஜ் என்பவரை திருமணம் செய்த துர்காதேவிக்கு, குழந்தை இல்லாததால், லதாவிடம் திருடினார். ஏற்கனவே உடல்நலம் பாதிப்பில் இருந்த லதாவின் குழந்தைக்கு துர்காதேவி எருமை பால் கொடுத்துள்ளார். இதன் காரணமாக, அக்குழந்தை இறந்தது. இதனால், சில நாட்களுக்கு முன், மீண்டும் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த துர்காதேவி, சித்ராதேவி என்பவரிடம் பணம் கொடுத்து ஒரு குழந்தையை வாங்கிச் சென்றார். குழந்தையை விற்ற சித்ராதேவி, தாய்ப்பால் கொடுக்காததால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். டாக்டர் அறிவுரைப்படி, குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக பேகம்பூரில் இருந்து துர்காதேவியை உறவினர்கள் அழைத்து வந்தபோது தான் போலீசில் பிடிபட்டார். இவரையும், கணவர் ஆரோக்கியராஜையும் மதிச்சியம் போலீசார் கைது செய்தனர்.