ஊரை விட்டு தம்பதி ஒதுக்கி வைப்பு : ஐகோர்ட் கிளை கண்டிப்பு
ஊரை விட்டு தம்பதி ஒதுக்கி வைப்பு : ஐகோர்ட் கிளை கண்டிப்பு
ADDED : ஆக 14, 2011 02:19 AM

மதுரை : திருச்சியில், கொழுந்தனை இரண்டாவது திருமணம் செய்ததால், தம்பதியரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததற்கு, ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்தது.
திருச்சி மணச்சநல்லூர் அருகே, மூலராயபாளையத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள். இவரின் கணவர் ஜெயசீலன் இறந்து விட்டார். கணவரின் தம்பி குணசீலனை, செல்லம்மாள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதியரை, கிராம மக்கள் ஒதுக்கி வைத்தனர். இதை எதிர்த்து, செல்லம்மாள் ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். இம்மனு, நீதிபதி ஜோதிமணி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் மோகன் காந்தி ஆஜரானார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகமது முகைதீன், தம்பதியரை கிராம மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார். ''தம்பதியரை ஒதுக்கி வைத்தது தவறு. அவர்களுக்கு, முழு சுதந்திரத்துடன் கிராமத்தில் வாழ உரிமை உண்டு. தம்பதியருக்கு, மீண்டும் பிரச்னை ஏற்பட்டால், கலெக்டர் தீர்த்து வைக்க வேண்டும்'' என, நீதிபதி உத்தரவிட்டார்.