ADDED : நவ 27, 2024 10:33 PM
சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
அடிப்படை வசதிகளை, அந்தப் பகுதியில் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வில், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, வெள்ளிமலை - சின்ன திருப்பதி இடையே சாலை அமைப்பது குறித்து, மனுத்தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 'வெள்ளிமலை - சின்ன திருப்பதி இடையே சாலை அமைக்க, அரசு அனுமதி அளித்த பின், 12 மாதங்களில் முடிக்கப்படும்' என்று கூறப்பட்டிருந்தது.
அதை பதிவு செய்த நீதிபதிகள், கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவர்களின் எண்ணிக்கை, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விபரங்களை, விரிவான அறிக்கையாக நான்கு வாரங்களில் தாக்கல் செய்யும்படி, அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.