ADDED : மார் 01, 2024 09:19 PM
சென்னை,:வேலைக்கார இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வின் மகள், மருமகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.
சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் பணிபுரிந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக, ஆண்டோ, அவரது மனைவி மெர்லினா ஆகியோருக்கு எதிராக, நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஆதிதிராவிடருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் கடந்த ஜனவரி 25ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
ஜாமின் கோரி இருவரும், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இருவர் சார்பிலும், மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி வாதாடினார்.
இருவருக்கும் ஜாமின் வழங்கி, விசாரணை அதிகாரி முன் இரண்டு வாரங்கள் ஆஜராகும்படி நிபந்தனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

