ADDED : ஜூலை 08, 2025 05:04 AM
திருப்பூர்: அவிநாசியில், இளம்பெண் தற்கொலை வழக்கில், கைதான கணவர், மாமனார் ஆகியோரின் ஜாமின் மனுக்களை ஏற்க கோர்ட் மறுத்து விட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்த அண்ணாதுரை - ஜெயசுதா தம்பதி மகள் ரிதன்யா, 27. கணவர் வீட்டாரின் கொடுமையால், ஜூன் 28ல் தந்தைக்கு ஆடியோ தகவல் அனுப்பி விட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேவூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, முதல் கட்டமாக கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியையும், பின்னர் சித்ராதேவியையும் சிறையில் அடைத்தனர்.
கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமின் கேட்டு, திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு அளித்தனர். அதேநேரம், ரிதன்யாவின் தந்தை தரப்பில் இருவருக்கும் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டது.
கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஜாமின் மனுக்கள் நேற்று மாவட்ட நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கவின்குமார் தரப்பு வக்கீல் ஆஜராகவில்லை. இதனால், மீண்டும் பிற்பகல் மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதில், அண்ணாதுரை தரப்பில் ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பையும் விசாரித்த நீதிபதி கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.