பஸ் ஊழியர்கள் 'ஸ்டிரைக்' வாபஸ் பணிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு பணிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு
பஸ் ஊழியர்கள் 'ஸ்டிரைக்' வாபஸ் பணிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு பணிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 11, 2024 12:28 AM
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை நிறுத்தி வைத்து, பணிக்கு திரும்பும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வூதிய பணப்பலன், பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு. அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
இந்த போராட்டத்துக்கு தடை கோரி, சென்னையைச் சேர்ந்த மாணவர் பால் கிடியோன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு, பிப்ரவரி 6ல், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
''வரும் 19ம் தேதி, தொழிலாளர் நலத் துறை அதிகாரி முன் பேச்சு நடக்க உள்ளது. அமைதியான முறையில் போராடியவர்கள், இப்போது பணிக்கு செல்வதை தடுக்கின்றனர். பொது மக்கள் நலன் கருதி, போராட்டத்தில் ஈடுபடக் கூடாது,'' என்றார்.
அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''வேலை நிறுத்தம் தொடர்பாக, டிசம்பர் 19ல் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு, 2014 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும்.
''ஜனவரி மாத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, அரசு ஏற்கவில்லை,'' என்றார்.
மற்றொரு தொழிற்சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ், ''பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும் பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. பொது மக்கள் பாதிக்க வேண்டும் என்பது, எங்கள் நோக்கம் அல்ல. டிசம்பரில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டது,'' என்றார்.
நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம் சார்பில், வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, ''பல்வேறு இலவசங்களை வழங்கும் அரசு, 10 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்கவில்லை,'' என்றார்.
இதையடுத்து, 'பொங்கல் பண்டிகை வருவதால், பொது மக்கள் நலன் கருதி, வரும் 19ம் தேதி வரை போராட்டத்தை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது' என, தொழிற்சங்கங்களுக்கு முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
மேலும், '92,000 ஓய்வூதியதாரர்களுக்கு, தற்காலிகமாக 2,000 ரூபாய் ஏன் அரசு வழங்க கூடாது...' எனவும் கேள்வி எழுப்பியது. அதற்கு, தொழிற்சங்கங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 19ம் தேதி வரை போராட்டத்தை நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, பொது மக்கள் நலன் கருதி, வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறுத்தி வைத்து, இன்று முதல் பணிக்கு திரும்பும்படி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
'பணிக்கு திரும்பும் தொழிலாளர்களை அனுமதிக்கவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது' எனவும், அரசுக்கு உத்தரவிட்டது.

