ஆதவ் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
ஆதவ் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
ADDED : அக் 04, 2025 01:15 AM
சென்னை:வன்முறையை துாண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட, ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கரூரில் நடந்த த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தில், இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை குழு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா, 'இலங்கை, நேபாளத்தைப்போல் புரட்சி வெடிக்க வேண்டும்' என, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
தேச பாதுகாப்புக்கும், நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையை துாண்டும் வகையிலும் கருத்து பதிவிட்ட, ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த எஸ்.எம்.கதிரவன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என் .செந்தில்குமார் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஆதவ் அர்ஜுனா மீது, ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இம்மனு செல்லத்தக்கதல்ல' என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆதவ் அர்ஜுனாவின் பதிவுகளும், நீதிபதியிடம் காட்டப்பட்டன.
இதையடுத்து, 'ஒரு சிறிய வார்த்தையும் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி விடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின், நீதிபதி செந்தில்குமார் பிறப்பித்த உத்தரவு:
ஆதவ் அர்ஜுனா புரட்சி ஏற்படுத்துவதுபோல கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் விஷயத்தில் பொறுப்பற்ற பதிவுகள் மீது, போலீசார் கவனத்துடன் வழக்கு பதிவு செய்து, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.