அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
ADDED : ஏப் 26, 2025 03:16 AM
சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களில், ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை, நீதிமன்ற காவலில் வைக்க, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி 2023ம் ஆண்டு ஜூன் 14ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக, 2023ம் ஆண்டு ஆகஸ்ட்டில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம், கார்த்திகேயன், கணேசன், வெற்றிச்செல்வன், அருண் ரவீந்திர டேனியல், ஆல்பிரட் தினகரன், ஜெயராஜ் குமார், பழனி, லோகநாதன், பிரபு, அனுராதா ரமேஷ் ஆகிய 12 பேருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை தரப்பில், கூடுதல் குற்றப்பத்திரிகை, கடந்த ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரணைக்கு ஏற்ற, முதன்மை அமர்வு நீதிமன்றம், ஏப்., 9ல் அசோக்குமார் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக, 'சம்மன்' அனுப்பியது. அதன்படி, கடந்த 9ல் அனைவரும் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஜெயராஜ் குமார் மற்றும் பழனி தரப்பில், 2 லட்சம் ரூபாய்க்கான ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, அவர்களை ஜூன் 9 வரை, நீதிமன்ற காவலில் வைக்க, போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை காகித வடிவில், ஜூன் 9ல் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வழங்க, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.