அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
ADDED : பிப் 09, 2024 12:55 AM
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த 2022 அக்டோபரில், 'யு டியூப்' சேனலுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், 'ஹிந்து கலாசாரத்தை அழிக்கும் நோக்கில், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என, கிறிஸ்துவ மிஷனரி என்.ஜி.ஓ., உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது' என்று கூறியிருந்தார்.
இது குறித்து, சேலத்தைச் சேர்ந்த பியுஷ் என்பவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்தார். இரு மதத்தினருக்கு இடையில் வெறுப்புணர்வை பரப்பும் விதமாக, அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளதாக புகாரில் கூறியிருந்தார்.
ஆவணங்களை பரிசீலித்த சேலம் மாஜிஸ்திரேட், புகாரில் ஆரம்ப முகாந்திரம் உள்ளதாகக் கூறி, அண்ணாமலைக்கு 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டார்.
சம்மனை எதிர்த்தும், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'வெறுப்பு பேச்சாக கருத முடியாது. 400 நாட்களுக்கு பின், புகாரை விசாரணைக்கு எடுத்துள்ளனர். புகாரை விசாரித்த போலீசார், வழக்குக்கான முகாந்திரம் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். இருந்தும், உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளார்' என்று கூறப்பட்டு உள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்கள் முன், அண்ணாமலை இந்த கருத்தை தெரிவித்து உள்ளார்.
ஹிந்து கலாசாரத்துக்கு எதிராக, கிறிஸ்துவ என்.ஜி.ஓ., செயல்படுவது போல் சித்தரிப்பதன் வாயிலாக, பிளவுபடுத்தும் நோக்கம் அவரது பேட்டியில் இருந்ததற்கு ஆரம்ப முகாந்திரம் உள்ளது.
மனுதாரர், முன்னாள் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி; சட்டம் பற்றி அவர் தெரிந்திருப்பார். தமிழக பா.ஜ., தலைவராக உள்ளார். நன்கு தெரிந்த தலைவர்; அவரது பேட்டி, விரிவாக சென்றடையும்; மக்களிடம் குறிப்பாக ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சம்மன் அனுப்புவதற்கான காரணங்களை குறிப்பிட்டு, மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார். சரியாக பரிசீலித்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாஜிஸ்திரேட் உத்தரவில் குறுக்கிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
மனுதாரர் தன் தரப்பு முகாந்திரங்கள் அனைத்தையும், கீழமை நீதிமன்றத்தில் எழுப்பிக் கொள்ளலாம். அதை தகுதி, சட்ட அடிப்படையில் கீழமை நீதிமன்றம் பரிசீலிக்கும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

