'கால்வாயை திரை போட்டு மறைத்ததே மோசமான தி.மு.க., ஆட்சிக்கு சான்று!'
'கால்வாயை திரை போட்டு மறைத்ததே மோசமான தி.மு.க., ஆட்சிக்கு சான்று!'
ADDED : ஜூன் 02, 2025 04:01 AM

கோவை : ''மதுரையில், தி.மு.க., மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றபோது சாக்கடை கால்வாயை திரை போட்டு மறைத்துள்ளனர். இதுவே மோசமான ஆட்சிக்கு சான்று,'' என, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோவையில் தெரிவித்தார்.
கோவையில் பழனிசாமி அளித்த பேட்டி:
மதுரையில் தி.மு.க., பொதுக்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அ.தி.மு.க.,வை பற்றி 27வது தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். 'கோ... கோ அ.தி.மு.க.,' எனக் கூறியுள்ளனர்.
தி.மு.க., தான் இந்த நாட்டிற்கு துரோகம் இழைத்துள்ளது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் சரி, நான் முதல்வராக இருந்த போதும் சரி. சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது.
துரோக ஆட்சி
இப்போது தி.மு.க, சட்டவிரோத ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது. தினந்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை நடந்து கொண்டே இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சி தான் துரோக ஆட்சி.
மத்தியில் 16 ஆண்டு காலம் ஆட்சி - அதிகாரத்தில் தி.மு.க., பங்கு பெற்றிருந்தது. பா.ஜ., - காங்., ஆட்சியிலும் இடம்பெற்றிருந்தது.
ஏன் அப்போதே இந்த கல்விக் கொள்கையில் கவனம் செலுத்தவில்லை? அப்போதே, மத்திய பட்டியலில் இருந்து, மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வந்திருக்கலாம்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை; அதிகாரம் இல்லாதபோது வேண்டுமென்றே திட்டமிட்டு பழி சுமத்துவது தான் தி.மு.க.,வின் வாடிக்கை.
மதுரையில் தி.மு.க., மாநாட்டுக்கு முதல்வர் சென்றபோது, சாக்கடை கால்வாயை திரை போட்டு மறைத்துள்ளனர். ஒரு மோசமான ஆட்சிக்கு இதுவே சாட்சி.
இது அவர்களுக்கே பிடிக்கவில்லை. கழிவுநீர் கால்வாயை துார்வாராமல் திரை போட்டு மறைத்துள்ளனர். அவ்வளவு அவல ஆட்சி, தமிழகத்தில் நடக்கிறது.
விஜய் பேசவில்லை
தே.மு.தி.க.,வுடன் சுமுகமான உறவு உள்ளது. கூட்டணி தொடருகிறது. ராஜ்யசபா தேர்தலுக்கான சீட் அளிக்க முடியாமை குறித்து, அ.தி.மு.க., தரப்பில் தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டோம்.
மற்றபடி, எதையும் கேட்டு கூட்டணியை உடைத்து விடலாம் என்று நினைக்காதீர்கள்; அது நடக்காது. என்னை பற்றி ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேநேரம், அது தொடர்பாக நடிகர் விஜய் என்னிடம் பேசவில்லை. இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.