கிராவல் குவாரி அனுமதி நிராகரிப்பு சுற்றுச்சூழல் ஆணையத்துக்கு கெடு
கிராவல் குவாரி அனுமதி நிராகரிப்பு சுற்றுச்சூழல் ஆணையத்துக்கு கெடு
UPDATED : அக் 15, 2026 01:53 AM
ADDED : அக் 15, 2026 01:49 AM
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில், கிராவல் மண் குவாரி அமைப்பதற்கான விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், குலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகா, புலியூர் சாலை கிராமத்தில் கிராவல் மண் குவாரி அமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தார்.
மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், குறிப்பிட்ட காரணங்கள் அடிப்படையில், விண்ணப்பத்தை நிராகரித்தது. இதை எதிர்த்து ராஜேஷ், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார்.
இது தொடர்பாக, தீர்ப்பாயத்தின் நீதிபதி, புஷ்பா சத்யநாராயணா, வல்லுனர் குழு உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில், மனுதாரரின் முறையீடு ஏற்கப்படுகிறது. இந்த விவகாரம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் மறு பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. மனுதாரரின் விண்ணப்பத்தை மறு ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் ஆணையம் உரிய முடிவு எடுக்கலாம். இதற்கான நடைமுறைகளை, எட்டு வாரத்துக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
