குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தி.மு.க., ஆட்சியில் அதிகரிப்பு: அன்புமணி
குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தி.மு.க., ஆட்சியில் அதிகரிப்பு: அன்புமணி
ADDED : அக் 03, 2025 04:01 AM

சென்னை: தி.மு.க., ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 61 சதவீதம் அதிகரித்துள்ளதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 2020ல், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, 4,338 ஆக இருந்த நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 2021ல் 6,064 ஆகவும், 2022ல் 6,580 ஆகவும், 2023ல் 6,968 ஆகவும் அதிகரித்துள்ளன.
அ.தி.மு.க., ஆட்சியோடு ஒப்பிடும்போது, தி.மு.க., ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் குற்ற எண்ணிக்கை, 60.66 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
தி.மு.க., ஆட்சியில், 2023 வரை மூன்று ஆண்டுகளில், 217 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்; ஏழு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளனர்; 28 சிசுக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.
மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தாராளமாக கிடைப்பது, காவல் துறை செயலிழந்து தடுமாறுவது போன்றவை தான், இவற்றுக்கு காரணம். இதற்கு தி.மு.க., அரசு பொறுப்பேற்க வேண்டும்.
போதுமான சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாததால், 'போக்சோ' வழக்குகள் முடங்கியுள்ளன. குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக, தமிழகத்தை மாற்றியது தான் தி.மு.க., அரசின் சாதனை. இதற்காக, ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.