
தந்தை வெட்டி கொலை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், செட்டிகாடு கிராமத்தை சேர்ந்தவர், மாயாண்டி, 60; விவசாய கூலி. இவருக்கு, மனநலம் சரியில்லாத முத்துமாணிக்கம், 30, என்ற மகன் உள்ளார். மூன்று ஆண்டுகளாக, மருத்துவ மனையில், சிகிச்சையில் இருந்து, மூன்று நாட்களுக்கு முன் வீட்டுக்கு வந்த முத்துமாணிக்கம், நேற்று காலை மாயாண்டியை, அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
போக்சோவில் சிக்கிய முதியவர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை அருகே, காசிமுத்து, 75, என்பவர், நெல்லிக்காய் பறித்து தருவதாக கூறி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த , 5 வயது சிறுமியை அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் காசிமுத்துவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனைவி அடித்து கொலை
காங்கேயம்: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் கவுரவ் மண்டல், 37. இவர், திருப்பூர் மாவட்டம், காங்கேயம், கணேஷ் நகரில், தங்கி, தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். இவரின் மனைவி ரிங்கு மண்டல், 31, என்பவருடன், நேற்று முன்தினம் இரவு, ஏற்பட்ட தகராறில், கவுரவ் மண்டல், மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்து, தலைமறைவானார். காங்கேயம் போலீசார், கவுரவ் மண்டலை தேடுகின்றனர்.
5 பேருக்கு ஆயுள் தண்டனை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன், 37. மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலராக இருந்தார்.
கடந்தாண்டு ஜன., 31ம் தேதி இரவு, நண்பருடன், வாலாஜாபேட்டையில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி பைக்கில் சென்றபோது, மர்ம கும்பல், விவேகானந்தனை முன் விரோதத்தில் வெட்டி கொன்றது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம், 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.
3 பேருக்கு போலீஸ் வலை
காரைக்கால்: காரைக்கால், திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் சிவம், 49; பா.ம.க., பிரமுகர். இவரது உறவினர் மகளை, அதே பகுதியை சேர்ந்த நந்தா என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்த புகாரையடுத்து, திருநள்ளாறு போலீசார் நந்தாவை கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு, நந்தாவின் நண்பர்களான திருநள்ளாறு அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்திரசேகரன் மகன் மாதேஷ், அப்துல் ரகுமான், மேலும் ஒருவர் சிவத்தை அரிவாளால் வெட்டி தப்பினர்.
திருநள்ளாறு போலீசார், மாதேஷ், அப்துல் ரகுமான், அவரது நண்பர் ஆகியோரை தேடி வருகின்றனர்.
த.வா.க., நிர்வாகி கொலை
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த பாலநாயக்கனப்பட்டி அருகே செங்கோடசின்னஹள்ளியை சேர்ந்தவர் ரவிசங்கர், 43. தமிழக வாழ்வுரிமை கட்சியில், கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர். நேற்று காலை வழக்கம் போல, அவருடைய பன்றி பண்ணையில் இருந்தார்.
அவருடன், சூளகிரி அருகே ஏணுசோனை பருவீதியை சேர்ந்த ஆதி, 20, உல்லட்டியை சேர்ந்த ரக்ஷித், 21, ஆகியோரும் இருந்தனர். மூவருக்கும் பண விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆதி, ரக்ஷித் ரவிசங்கரை ஓட ஓட விரட்டி, வெட்டியதில் அவர் உயிரிழந்தார். ஆதி, ரக்ஷித் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.