'கிரைம்' செய்தியாளர்களுக்கு 'சம்மன்'; வீட்டு முகவரி கேட்டு மிரட்டும் போலீஸ்
'கிரைம்' செய்தியாளர்களுக்கு 'சம்மன்'; வீட்டு முகவரி கேட்டு மிரட்டும் போலீஸ்
ADDED : பிப் 04, 2025 03:36 AM

சென்னை: செய்தியாளர்களுக்கு, 'சம்மன்' அனுப்பியுள்ள சிறப்பு புலனாய்வு குழு போலீசார், மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப, வீட்டு முகவரியை கேட்டு மிரட்டல் விடுப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவான, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை, 'லீக்' ஆனது. இது குறித்து, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அந்த எப்.ஐ.ஆர்., நகலை, சி.சி.டி.என்.எஸ்., எனப்படும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் எனப்படும், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தவர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், குற்றங்கள் தொடர்பாக செய்தி சேகரித்து வரும், 'கிரைம்' பிரிவு செய்தியாளர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில், மூன்று பேரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்துஉள்ளனர்.
இதுதொடர்பாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம், சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
அவர்களிடம், 'எப்.ஐ.ஆர்., நகலை பதிவிறக்கம் செய்வது குற்றம் அல்ல. அதை காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியிட்டது தான் தவறு. செய்தியாளர்கள் என்ற அடிப்படையில், அவர்களுக்குள், எப்.ஐ.ஆர்., நகலை பகிர்ந்து கொண்டது குற்றமாகாது' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.
ஆனால், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், எப்.ஐ.ஆர்., நகலை, 'வாட்ஸாப்' தளத்தில் பகிர்ந்த கிரைம் செய்தியாளர்களை தொடர்பு கொண்டு, 'உங்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும். வீட்டு முகவரியை சொல்லுங்கள்' என, மிரட்டல் விடுப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.