தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 3 ஆண்டுகளில் அதிகரிப்பு; கவர்னர் ரவி பேச்சு
தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 3 ஆண்டுகளில் அதிகரிப்பு; கவர்னர் ரவி பேச்சு
ADDED : டிச 07, 2024 03:23 AM

சென்னை : “தமிழகத்தில், தலித் மக்களுக்கு எதிரான குற்றங் கள், கடந்த மூன்றாண்டுகளில், 40 சதவீதம் அதிகரித்துள்ளன,” என, கவர்னர் ரவி கூறினார்.
அம்பேத்கரின், 69வது நினைவு தின நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து, கவர்னர் ரவி மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கர் மக்கள் இயக்கம் தலைவர் இளமுருகு முத்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வரபிரசாத் ராவ், தேசிய எஸ்.சி., கமிஷன் இயக்குநர் ரவிவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஜினாமா
பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு சமூக நல்லிணக்க விருதுகள் வழங்கி, கவர்னர் பேசியதாவது:
நீண்ட சோதனைகளை தாண்டியே, அம்பேத்கர் சாதனை படைத்துள்ளார். அவர் சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவரின் வாழ்வில் நடந்த சோதனைகள், மற்றவர்கள் வாழ்வில் நடந்திருந்தால், நிச்சயம் யாரும் இந்தளவிற்கு முன்னேறிஇருக்க மாட்டார்கள்.
நாட்டில் வேற்றுமைகள் இருந்தாலும், அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் நம்மை ஒன்றிணைத்து செல்கிறது. கவர்னர் மாளிகையிலும் அவரது சிலைகள் உள்ளன. இங்கு யார் வந்தாலும், அவரை நினைவு கொள்ளும் வகையில், இந்த சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஹிந்து மதம் தொடர்பான சட்டத்தில், அனைத்து பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என, பார்லிமென்டில் அவர் தெரிவித்ததால், எதிர்ப்புகள் கிளம்பின, அதனால், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்த தேர்தலில் அவர் போட்டியிட்டபோது, தேவையில்லாத கருத்துகளை அவர் மீது திணித்து தோற்கடித்தனர். அதுதான் மக்கள் செய்த பெரிய பாவம். அம்பேத்கர் நேர்மையானவராக இருந்ததால், பார்லிமென்ட்டுக்குள் அவரை வர விடாமல் தடுத்தனர்.
கடந்த 1952ல் நடந்த முதல் தேர்தலில், அவர் எப்படி தோற்கடிக்கப்பட்டார் என்பதை, நாம் கவனிக்க வேண்டும். அவர் பார்லிமென்ட்டுக்கு வரக் கூடாது என்ற சிலரது சுயநல எண்ணங்களால் தான், அவர் தோற்கடிக்கப்பட்டார்.
சமூக நீதி பற்றி நாம் பேசுகிறோம் என்றால், அதற்கு அரசியலமைப்பு சட்டத்தை ஏற்படுத்தி தந்தவர் அம்பேத்கர். அதை யாராலும் ஈடுசெய்ய முடியாது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த அதே சமயத்தில், பல நாடுகளும் சுதந்திரம் பெற்றன.
அந்நாடுகள் எல்லாம் திணறியபோது, இந்தியாவால் நிலைத்து முன்னேற முடிந்ததற்கு காரணம் அரசியல்அமைப்பு சட்டம் தான்.
அது பரந்து விரிந்த நாட்டின் பிரச்னைகளை பற்றி பேசியது மட்டுமின்றி, வருங்காலத்துக்கு ஏற்றதாகவும் அமைந்திருந்தது. இன்று சில கட்சிகள் சமூக நீதி என்பது, எங்களுக்கானது என சொந்தம் கொண்டாடி வருகின்றன. சம உரிமை என்பது அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே.
40 சதவீதம்
இப்போது சிலர், அம்பேத்கர் தங்களுக்கு மட்டும் சொந்தமானவர் என கூறி, அவரது பெயர், வசனங்களை தேர்தலில் வெற்றி பெற மட்டும் பயன்படுத்துகின்றனர். ஆனால், உண்மையில் சமூக நீதி இங்கு இருக்கிறதா என்ன?
தலித்துகளை கோவிலில் அனுமதிக்காமல் தடுப்பது, குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலப்பது, பள்ளியில் பட்டியலின மாணவர்களை வேறு பக்கம் உட்கார வைப்பது உள்ளிட்ட கொடுமைகள், அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து, 75 ஆண்டுகள் கடந்தும் இன்றும் அரங்கேறி வருகின்றன.
நாள் முழுதும் சமூக நீதி பேசினாலும், தலித்துகளை மதிக்கமால் தான் உள்ளனர். தேசிய குற்ற ஆவண காப்பகமான என்.சி.ஆர்.பி., தரவுகள்படி, தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. ஆனாலும், இங்கு சமூக நீதி பற்றி பேசுகின்றனர்.
தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் குறையவில்லை. இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு இங்கு தண்டனை வழங்கும் விகிதமும், தேசிய சராசரியை விட குறைவாக தான் உள்ளது.
இவ்வாறு கவர்னர் பேசினார்.