ADDED : அக் 13, 2024 08:10 AM

சென்னை : பிரதமர் நரேந்திர மோடியின், 74வது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண ஞான சபாவில், 'நமோ' கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில், 1,000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழகத்தை சேர்ந்த, 'பாராலிம்பிக்' வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.
இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
பிரதமர் மோடி, தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லுாரிகளை கொடுத்துள்ளார். தமிழகம் மற்றும்தமிழின் பெருமையை சென்ற இடங்களில் எல்லாம் பறைசாற்றுகிறார்.
திருச்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை வழங்கி, அந்த மாவட்டங்களை சிறப்பாக மாற்றியிருக்கிறார்.
ஆனால், அவரை பார்த்து, தமிழகத்தை மோடி புறக்கணிக்கிறார் என்று விமர்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:
பிரதமர் மோடியின் திட்டங்களால், 2047ல் இந்தியா வல்லரசாகும். விளையாட்டுத் துறையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் வாயிலாக, ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில், இந்தியா அதிக தங்கங்களை குவித்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.