ADDED : பிப் 02, 2024 11:13 PM

சென்னை:''ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் தேவையான அளவிற்கு இருப்பு உள்ளன,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
கூட்டுறவு துறையில் பணியின் போது இறந்த, 26 பேரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன், பணிநியமன ஆணையை வழங்கினார்.
அதன்பின், அவர் அளித்த பேட்டி:
கூட்டுறவு துறையில் இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் உள்ளது. கிராம மக்கள், விவசாயிகள் என, அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த, கூட்டுறவு வங்கி வழியாக பல்வேறு நிதியுதவிகளை செய்து வருகிறோம்.
விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 12,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை தாண்டி 13,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
நடப்பாண்டு, 16,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை, 13,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், கூட்டுறவு துறையில் 9,000 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களின் தொகுதி நிதியில் கட்டப்படுகின்றன; துறையின் சிறப்பு திட்டங்கள் வழியாகவும் கட்டப்படுகின்றன. அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவுப்பொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டுறவு துறை செயலர் கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஆகியோர்உடனிருந்தனர்.

