அடித்து நொறுக்கியது மழை: அழுகும் அபாயத்தில் பயிர்கள்
அடித்து நொறுக்கியது மழை: அழுகும் அபாயத்தில் பயிர்கள்
UPDATED : ஜன 09, 2024 02:57 AM
ADDED : ஜன 09, 2024 02:40 AM

விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய பெய்த கனமழையால், குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.
அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கி உள்ளன. மழை தொடரும் பட்சத்தில் பயிர்கள் அழுகும் அபாயம் இருப்பதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இம்மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 23.8 செ.மீ., மழை பதிவானது.
விவசாயிகள் கவலை
மாவட்டத்தில் 1.70 லட்ம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்த நிலையில், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் 25,000 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கின.
நாகையில் இரு தினங்களாக வெளுத்து வாங்கிய கனமழையில், 1,000 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டன. மேலும், மழையால் 15 வீடுகள் தேசமடைந்தன.
மாவட்டத்தில், நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திருவிடைமருதுாரில் 11.6, கும்பகோணம் 10.5 செ.மீ., மழை பதிவானது.
தொடர்மழை காரணமாக, கும்பகோணம், சுவாமிமலை, பாபுராஜபுரம், ஏரகரம், உத்திரை, திருப்புறம்பியம், நீலத்தநல்லுார், அசூர், திருவிடைமதுார் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால், ஆங்காங்கே பூ பூக்கும் தருணத்திலும், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின.
விழுப்புரம், கடலுார்
விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இடைவிடாமல் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக மரக்காணத்தில் 13.3 செ.மீ., மழை பதிவானது.
திண்டிவனம் - மரக்காணம் சாலையில் ராவணபுரம் ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது. ஆலங்குப்பத்தில் வெள்ளப்பெருக்கால் சாலையில் 1 கி.மீ., துாரம் வரை வெள்ளம் ஓடியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பகிங்ஹாம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 5000 ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின.
மரக்காணம், அனுமந்தை, கூனிமேடு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், தர்பூசணி, கிர்ணி, வேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலுாரில் பலத்த காற்றுடன் 13 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெறும் இடம் வெள்ளக்காடாக மாறியது. முகாமில் அமைக்கப்பட்டிருந்த கூடாரம் சரிந்து விழுந்தது. மைதானத்தில் மழை நீர் தேங்கியதால் ராணுவ ஆள் சேர்ப்பு பணி தடைபட்டது.
புதுச்சேரியில், 12.58 செ.மீ., மழை பதிவானது. திருக்கனுார், பாகூர், கரிக்கலாம்பாக்கம், சோரியாங்குப்பம், சுத்துக்கேணி உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டிருந்த, 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், 22.1 செ.மீ., மழை பதிவானது. இதனால், சிதம்பரம் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
- நமது நிருபர் குழு -