கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொட்டியது கனமழை; 80 ஆயிரம் ஏக்கரில் நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொட்டியது கனமழை; 80 ஆயிரம் ஏக்கரில் நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின
ADDED : ஜன 09, 2024 07:36 AM

கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 80 ஆயிரம் ஏக்கர் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை கொட்டியது.
அதில் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகப்பட்சமாக சிதம்பரத்தில் 22.8 செ.மீ., புவனகிரி 18.9, சேத்தியாத்தோப்பு 15.5, அண்ணாமலை நகர் 14.7, காட்டுமன்னார்கோவில் 14.3, கடலுார் 13.6, கொத்தவாச்சேரி 13, லால்பேட்டை 12.1, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் 13.3., வானுார் 12 செ.மீ., மழை கொட்டியது.
கனமழை காரணமாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பரங்கிப்பேட்டை, கடலுார் உள்ளிட்ட பல பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.
அதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், வானுார், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஆயிரம் ஏக்கர் நெல், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, வேர்க்கடலை, தட்டைபயிறு, பனிப்பயிர், தர்பூசணி உள்ளிட்ட பயிர்களும் மழைநீரில் மூழ்கின.
மரக்காணம் பகுதியில் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 5000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்ய தயார் நிலையில் இருந்த உப்பளங்கள் நீரில் மூழ்கின.
-நமது நிருபர்-