கரன்ட் 'கட்' ஜெனரேட்டரும் 'ரிப்பேர்' டார்ச் வெளிச்சத்தில் மாநகராட்சி கூட்டம்
கரன்ட் 'கட்' ஜெனரேட்டரும் 'ரிப்பேர்' டார்ச் வெளிச்சத்தில் மாநகராட்சி கூட்டம்
ADDED : ஆக 30, 2025 03:53 AM

தஞ்சாவூர் : மின் தடை காரணமாக, மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில், கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், மேயர் சரவணன் தலைமையில் நேற்று மாலை நடந்தது.
பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், மாலை 4:10 மணிக்கு கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் மின் தடை ஏற்பட்டது.
அங்குள்ள ஜெனரேட்டரும் பழுதாகி இருந்ததால், அரங்கின் மூன்று வாயில் கதவுகளையும் திறந்து வைத்து, மாநகராட்சி கூட்டம் நடந்தது. ஆனாலும், கூட்ட அரங்கினுள் போதிய வெளிச்சம் இல்லை.
அதையடுத்து, மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் தங்களின் மொபைல் போன்களில் உள்ள டார்ச்சை ஆன் செய்து, அந்த வெளிச்சத்தில் கூட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., கவுன்சிலர் ஆதிலெட்சுமி, “தாமதமாக கூட்டத்தை ஆரம்பித்ததால், என் பகுதியில் உள்ள குறைகளை விளக்க முடியவில்லை. என் பகுதியில், பல இடங்களில் இணைப்பு பாலங்களை அகற்றியதால், வழி இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.
“இந்த சூழலில், மாநகராட்சி அலுவலகத்திலேயே மின் தடை ஏற்பட்டால், எப்படி எடுத்துக்கொள்வது,” என கோபத்துடன் கூறியதோடு, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அதன்பின், டார்ச் வெளிச்சத்திலேயே தொடர்ந்து நடந்த மாநகராட்சி கூட்டத்தில், போதிய வெளிச்சம் இல்லாத சூழலில், 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி, 4:45 மணிக்கு, மாநகராட்சி கூட்டத்தை மேயர் சரவணன் நிறைவு செய்தார்.
மின் தடை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி அலுவலகத்தின் கூட்ட அரங்கத்தில், 1 கோடி ரூபாய் அளவுக்கு பணிகள் உள்ளன.
'போதிய நிதி இல்லாததால், அந்த பணிகள் நடக்கவில்லை. இதனால் தான், பழைய மாநகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது' என்றனர்.

