சட்ட விரோதமாக பட்டாணி இறக்குமதி; விசாரணை வளையத்தில் சுங்க அதிகாரிகள்
சட்ட விரோதமாக பட்டாணி இறக்குமதி; விசாரணை வளையத்தில் சுங்க அதிகாரிகள்
ADDED : பிப் 18, 2025 04:26 AM
சென்னை : சட்ட விரோதமாக, பச்சை பட்டாணி இறக்குமதி செய்ய உதவிய சுங்கத்துறை அதிகாரிகளுடன், தொடர்பில் இருந்தவர்கள், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து சென்னை துறைமுகம் வழியாக, சட்ட விரோதமாக பச்சை பட்டாணி இறக்குமதி செய்வதாக, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
சோதனை
அதன் அடிப்படையில் விசாரித்து, இதற்கு உதவிய, துறைமுக சுங்கத்துறை அதிகாரிகள் மூன்று பேர், சுங்க ஏஜன்ட், டில்லியைச் சேர்ந்த பெண் இறக்குமதியாளர் என, ஐந்து பேரை, கடந்த 11ம் தேதி கைது செய்தனர்.
துறைமுகத்தில் இருந்து வெளியே செல்ல இருந்த, 2 கோடி ரூபாய் மதிப்பிலான, 100 டன் பச்சை பட்டாணியையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, சுங்கத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் நடத்திய சோதனையில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.
தொடர் விசாரணையில், சட்டவிரோத இறக்குமதிக்கு, சுங்கத்துறை முக்கிய அதிகாரி உதவியது தெரியவந்தது.
கடந்த 13ம் தேதி துறைமுக ஏற்றுமதி பிரிவு கூடுதல் கமிஷனர் சதீஷ் குமார் கைது செய்யப்பட்டார்.
சுங்கத்துறை அதிகாரிகள் சிலர், சதீஷ் குமார் தந்த அழுத்தத்தின் பேரில், இறக்குமதிக்கு உதவியதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், மற்ற மாநிலங்களை சேர்ந்த ஏஜன்டுகள் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்களுக்கு உதவிய சிலர், விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது:
முறைகேடாக இறக்குமதி செய்ய உதவிய அதிகாரிகள் மற்றும் ஏஜன்டுகளிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், கைது செய்யப்பட்டவர்களுடன், தொடர்பில் இருந்தவர்கள், கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கன்டெய்னர்கள் வந்திறங்கும் இடத்தை கண்காணித்து, அனுமதி தருவது சதீஷ் குமார் வேலை. அந்த வகையில், அவர் பல கன்டெய்னர்களை, எந்த சோதனையும் இல்லாமல் வெளியில் அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
முறைகேடு
இதற்கு உதவிய சில இறக்குமதி முகவர்களையும் விசாரிக்க உள்ளோம். இறக்குமதி முறைகேடுகள் குறித்த பணப்பரிவர்த்தனை விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்த பணம் மற்றும் தங்கத்துக்கு, எந்த முறையான ஆவணங்களும் கிடையாது. இவை எப்படி வந்தன என, விசாரித்து வருகிறோம். சென்னை மட்டுமின்றி, மற்ற மாநிலங்களை சேர்ந்த ஏஜன்டுகளும், தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

