கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது; கட்சியினருக்கு மீண்டும் சொல்கிறது தி.மு.க.,
கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது; கட்சியினருக்கு மீண்டும் சொல்கிறது தி.மு.க.,
ADDED : டிச 05, 2024 06:49 PM

சென்னை: '' முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது,'' என நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தி.மு.க., மீண்டும் தடை விதித்து உள்ளது.
தமிழகத்தில் அரசியல் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என வந்தால், பேனர் வைப்பது கலாசாரமாகவே மாறிவிட்டது. இதற்கு என சில விதிமுறைகள் இருந்தாலும், அதனை கண்டு கொள்வது கிடையாது.
குறிப்பாக அரசியல் கட்சியினர், தங்கள் தலைவரை வரவேற்பதற்காக, அவர்கள் பயணிக்கும் இடங்களில் எல்லாம் கட் அவுட், பேனர்கள் வைப்பது வாடிக்கை. இதனால், பல இடங்களில் பொது மக்கள் சில பிரச்னைகளையும், தொந்தரவுகளையும் சந்திக்கின்றனர். பேனர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிகழ்வும் அரங்கேறியது.
இந்நிலையல், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:முதல்வர் உத்தரவுப்படி, இனிமேல் தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்க வேண்டாம்.
பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள் வைக்கக்கூடாது.
கட்சித் தலைமையின் அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது என்று ஏற்கனவே தி.மு.க., தலைமை கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதையும் மீறி கட் அவுட், பேனர் வைப்பது தொடர்கிறது. இந்நிலையில் இப்போது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.