சைபர் குற்றவாளிகள் ரூ.2.90 கோடி சுருட்டல் 'டிஜிட்டல்' கைதான 2 பேர் மீட்பு
சைபர் குற்றவாளிகள் ரூ.2.90 கோடி சுருட்டல் 'டிஜிட்டல்' கைதான 2 பேர் மீட்பு
ADDED : ஜூலை 12, 2025 12:18 AM
சென்னை:சைபர் குற்றவாளிகளால், 'டிஜிட்டல்' கைது செய்யப்பட்டு, 2.90 கோடி ரூபாயை இழந்த டாக்டர் உட்பட இருவர் மீட்கப்பட்டனர்.
'ஆன்லைன்' மூலமாக சைபர் குற்றவாளிகள் பண மோசடி செய்வதை தடுக்க, சென்னை சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தில் நவீன தொழில்நுட்ப உதவியுடன், இணையவழி கட்டளை மையத்தில் புலனாய்வு குழு செயல்படுகிறது.
தமிழகம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இருவர், சைபர் குற்றவாளிகளால், 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்டு இருப்பதை, அக்குழுவினர் கண்டறிந்தனர்.
இது தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ள நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களையும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அம்மாநில போலீசார், சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்குச் சென்று, அவரை மீட்டுள்ளனர். அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த நபரின் வீட்டிற்கு, சைபர் குற்றப்பிரிவு போலீசார் சென்றனர்.
ஆனால், அவர் டிஜிட்டல் கைது செய்யப்பட்டு இருப்பதால், வீட்டை திறக்க முடியாது என, கூறியுள்ளார். அவரிடம், டிஜிட்டல் கைது குறித்து மொபைல் போன் மூலமாக எடுத்துரைத்து, இரண்டு மணி நேரத்திற்கு பின் மீட்டுள்ளனர்.
விசாரணையில், அவர் டாக்டர் என்பது தெரியவந்தது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை போலீசார் போல அவரிடம் பேசி, போதை பொருள் கடத்தல் வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, டிஜிட்டல் மூலமாக கைது செய்து, அவரிடம், 2.90 கோடி ரூபாயை மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.