ஓராண்டில் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.1,674 கோடி இழப்பு
ஓராண்டில் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.1,674 கோடி இழப்பு
ADDED : ஏப் 29, 2025 06:57 AM

சென்னை : 'சைபர் குற்றவாளிகளிடம், பல்வேறு தரப்பினர் இழந்த, 1,674 கோடி ரூபாயில், 83.34 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 772 கோடி ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு, இணையவழி மோசடி நபர்களிடம் சிக்கியவர்கள், 1,674 கோடி ரூபாயை இழந்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு சொந்தமான, 772 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
அவர்களிடம் இருந்து 83.34 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது, 2023ம் ஆண்டை விட, 24 கோடி ரூபாய் அதிகம்.
இணையவழி குற்றப்பிரிவால், மோசடியில் ஈடுபட்ட 861 பேர் கைது செய்யப்பட்டனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட, 20,453 சிம்கார்டுகள் முடக்கப்பட்டன.
மேலும், 52 இணையதளங்கள், 274 யு டியூப் வீடியோக்கள், 837 பேஸ்புக் பக்கங்கள், 608 இன்ஸ்டாகிராம் பக்கங்கள், 55 எக்ஸ் வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன.
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் கோரிக்கையின்படி, சூதாட்ட இணையதங்கள் ஐந்து அகற்றப்பட்டன. காணாமல் மற்றும் திருடுபோன, 16,317  மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

