தமிழகத்தை நெருங்குது புயல்; 3 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை
தமிழகத்தை நெருங்குது புயல்; 3 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை
UPDATED : நவ 28, 2024 05:20 AM
ADDED : நவ 28, 2024 05:19 AM

சென்னை : தென் மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வருகிறது.
இதனால், 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்றும், அதில் நான்கு மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றும், சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம் அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நாகப்பட்டினத்தில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதே மாவட்டத்தில் கோடியக்கரை, வேளாங்கண்ணி பகுதிகளில் தலா, 18 செ.மீ., மழை பெய்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இது நேற்று காலை நிலவரப்படி நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கில், 370 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கே, 550 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.
இது புயலாக வலுவடைந்து, வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச., 3 வரை இந்நிலை தொடரக்கூடும்.
![]() |
இன்று
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். இதற்கான 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில், நாளை மிக கன மழை பெய்யக்கூடும். இதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில், நாளை மறுதினம் மிக கன மழையும், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் கரையை நெருங்கும்போது, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதே போன்று, கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த சில நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.