வங்கக்கடலில் இன்று உருவாகிறது பெங்கல் புயல்! தயாராகிறது தமிழகம்
வங்கக்கடலில் இன்று உருவாகிறது பெங்கல் புயல்! தயாராகிறது தமிழகம்
ADDED : நவ 27, 2024 06:19 AM

சென்னை: தெற்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக உருவெடுக்கும். தமிழகத்தை நோக்கி, இது நகர்வதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நேற்றைய நிலவரப்படி, நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில், 590 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து, 710 கி.மீ., தொலைவிலும், சென்னையில் இருந்து, 800 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு, வடமேற்கில் மணிக்கு, 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்த நிலையில், இன்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக மாறிய பின், தமிழக கரையை ஒட்டி நிலைக்கொள்ளலாம்.
![]() |
இன்று
* கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று, 20 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலுார், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, 12 முதல், 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்யலாம். இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது
* ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று, 11 செ.மீ., வரை கனமழை பெய்யலாம்.
நாளை
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , விழுப்புரம் மாவட்டங்களில் மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது
* ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில், நாளை மறுதினம் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசும் என்பதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஏற்கனவே கடலுக்கு சென்றவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.