உருவாகிறது பெஞ்சல் புயல்; மீண்டும் வானிலை மையம் அறிவிப்பு
உருவாகிறது பெஞ்சல் புயல்; மீண்டும் வானிலை மையம் அறிவிப்பு
UPDATED : நவ 29, 2024 07:02 PM
ADDED : நவ 29, 2024 11:11 AM

சென்னை: வங்கக்கடலில் அடுத்த 3 மணி நேரத்தில் பெஞ்சல் புயல் உருவாகிறது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது. தற்போது, சென்னைக்கு தென் கிழக்கே 470 கி.மீ., தொலைவில் நிலை கொண்டு உள்ளது. நாளை மாலைக்குள் படிப்படியாக வலுவை இழந்துவிடும் என வானிலை மையம் கூறி இருந்தது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என சென்னை வானிலை மையம் திட்டவட்டமாக கூறியிருந்தது. தற்போது, அடுத்த 3 மணி நேரத்தில் பெங்கல் புயல் உருவாகிறது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் பெஞ்சல் புயல் உருவாகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.,30) காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாலச்சந்திரன் பேட்டி
தென்னிந்திய வானிலை ஆய்வு மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். நாளை (நவ.,30) மதியம் காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்கும்.
வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.