பாம்பனில் சூறாவளி: கடல் கொந்தளிப்பு படகுகள் சேதம்; 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
பாம்பனில் சூறாவளி: கடல் கொந்தளிப்பு படகுகள் சேதம்; 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
UPDATED : நவ 28, 2024 03:55 AM
ADDED : நவ 28, 2024 02:57 AM

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம், பாம்பனில் சூறாவளி வீசுவதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் நான்கு நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதியில் சூறாவளி வீசி கனமழை பெய்து வருகிறது.
இதனால் ராமேஸ்வரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதுகின்றன.
இதில் பாம்பன் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பாம்பன் தெற்குவாடி, லைட்ஹவுஸ் தெரு கடலோரத்தில் உள்ள மீனவர் குடிசை வீடுகள், மீன்களை பதப்படுத்தும் குடிசைகளை ராட்சத அலைகள் சேதப்படுத்தின. இதனால் கடலோரத்தில் வசித்த மீனவர்கள் அவதிப்பட்டனர்.
நேற்று மதியம் 1:00 மணி வரை பாம்பன் பகுதியில் மணிக்கு 60 முதல் 68 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால் பாம்பன் அருகே மண்டபம் வேதாளையில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த பழமையான ஆலமரம் முறிந்து சாலையில் விழுந்தது.
இதனை மண் அள்ளும் இயந்திரம் மூலம் தீயணைப்பு வீரர்கள், போலீசார் அகற்றினர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வங்க கடலில் உருவான புயலால் நேற்று மதியம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இதையடுத்து பாம்பன் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
ஏற்கனவே நவ.,24 முதல் ராமேஸ்வரம் தீவுப் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.