பெஞ்சல் புயல், வெள்ளம் பாதிப்பு; ஆய்வை துவக்கியது மத்தியக்குழு!
பெஞ்சல் புயல், வெள்ளம் பாதிப்பு; ஆய்வை துவக்கியது மத்தியக்குழு!
ADDED : டிச 07, 2024 11:16 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்களிடம், மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்து இருப்பதை தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயல் மழை வெள்ளம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதி அளித்து இருந்தார்.
அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் பெஞ்சல் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று இக்குழுவினர் சென்னை வந்தனர். இந்நிலையில், இன்று (டிச.,07) விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர். மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்தது குறித்து மத்திய குழுவிடம் வருவாய்த்துறை செயலாளர் அமுதா, மாவட்ட கலெக்டர் பழனி விளக்கினர்.
மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து சேத விபரங்களை மதிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்த பிறகு, மத்திய அரசு நிதி வழங்கும். இது தவிர, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து புயல் நிவாரணப்பணிகளுக்காக, 944 கோடி ரூபாயை ஏற்கனவே மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.