கொள்ளிடத்தில் கட்டப்பட்ட கதவணை சுற்றுச்சூழல் அனுமதி மறுப்பால் இழுபறி
கொள்ளிடத்தில் கட்டப்பட்ட கதவணை சுற்றுச்சூழல் அனுமதி மறுப்பால் இழுபறி
ADDED : ஜன 28, 2025 10:27 PM
சென்னை:சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், கொள்ளிடம் ஆற்றில் நீர்வளத்துறை கட்டியுள்ள கதவணையை திறப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
திருச்சி முக்கொம்பில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டு உள்ளது. இதனால், அங்கு நீர் சேமிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், கொள்ளிடம் ஆற்றில் கடைமடை வரை நீரை சேமிக்க, கட்டமைப்புகள் இல்லை. இதனால், வெள்ள காலங்களில், காவிரியில் இருந்து திருப்பி விடப்படும் நீர், கொள்ளிடம் ஆற்றின் வழியாக, வங்கக்கடலுக்கு சென்று வீணாகிறது.
ஒவ்வொரு ஆண்டும், 30 டி.எம்.சி.,க்கு மேல் நீர் வீணாகி வருகிறது. எனவே, கொள்ளிடம் ஆற்றில் நீரை சேமிக்கும் வகையில், பல்வேறு இடங்களில் கதவணைகள் அமைப்பதற்கு, அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது.
இதற்காக, கடலுார் மாவட்டம் ஆதனுார், நாகப்பட்டினம் மாவட்டம் குமாரமங்கலம் இடையே, கதவணை கட்ட, 494 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகள், 2019 மே மாதம் துவங்கின. மொத்தம் 1,064 மீட்டர் நீளத்திற்கு, 84 கண்களுடன், 10 அடி உயரத்திற்கு கதவணை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், 0.33 டி.எம்.சி., நீரை சேமிப்பதுடன், 307 ஆழ்துளை கிணறுகளில் நீரை செறிவூட்டவும், கதவணையின் மேல்பகுதியில் நாகப்பட்டினம் - கடலுார் இடையிலான போக்குவரத்து சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
நிதி ஒதுக்காதது, நிலம் கையகப்படுத்தாதது உள்ளிட்ட காரணங்களால், பணிகள் இழுபறியாக நடந்து வந்தன. தற்போது, 95 சதவீத பணிகள் முடிந்துள்ளன. பெயின்ட் அடித்தல் உள்ளிட்ட பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த கதவணையை, பிப்., 16ம் தேதி முதல்வர் திறக்க தேதி குறிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இதற்காக, நீர்வளத்துறை வாயிலாக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்து அது நிலுவையில் உள்ளது.
முன்கூட்டியே அனுமதி பெறாமல் பணிகளை துவங்கி விட்டு, பணிகள் முடியும்போது அனுமதி கேட்பதால், சுற்றுச்சூழல் துறையினர் ஆட்டம் காட்டுகின்றனர்.. இதனால், புதிய கதவணையை முதல்வர் குறித்த தேதியில் திறந்து வைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

