பயன்பாடில்லாத சிம்னிகளால் ஆபத்து; கோவை செங்கல் சூளைகளுக்கு வந்த அதிரடி உத்தரவு
பயன்பாடில்லாத சிம்னிகளால் ஆபத்து; கோவை செங்கல் சூளைகளுக்கு வந்த அதிரடி உத்தரவு
ADDED : அக் 25, 2024 02:04 PM

கோவை: கோவையில் பயன்பாடில்லாத செங்கல் சூளைகளின் சிம்னிகளை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட வருவாய் துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கோவை தடாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. உரிய அனுமதியின்றி செங்கல் சூளைகள் செயல்பட்டு வருவதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் 184 செங்கல் சூளைகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக செங்கல் சூளைகள் செயல்படாமல் இருந்து வருகின்றன. இந்த சூழலில், ஆனைக்கட்டி - மன்னார்காடு சாலையை ஒட்டி இருந்த சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளையின் 100 அடி உயரம் கொண்ட சிம்னி (Chimney) இடிந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சுமார் 2 மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பயன்பாடில்லாத செங்கல் சூளைகளின் சிம்னிகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக செங்கல் சூளைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த எஸ்.கணேஷ் என்பவர் கூறுகையில், 'தடாகம் - வீரபாண்டி சாலையில் செங்கல் சூளைகளுக்கு சொந்தமான சுமார் 40க்கும் மேற்பட்ட சிம்னிகள் உள்ளன. அதேபோல, கணுவாய் - துடியலூர் சாலையில் 70 சிம்னிகள் இருக்கின்றன. ஆனைகட்டி - மன்னார்காடு சாலையில் உள்ள சிம்னிகளை இடிக்க வேண்டி உள்ளது. இவைகள் கடந்த 3 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வருகின்றன. பராமரிப்பின்றி இருக்கும் சிம்னிகள், கனமழை காரணமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவற்றை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்,' என வலியுறுத்தினார்.
இது தொடர்பாக கோவை வடக்கு வருவாய்த்துறை அதிகாரிகள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட செங்கல் சூளைகளின் உரிமையாளர்களிடம் பேசியுள்ளோம். சாலையோரம் இருக்கும் சிம்னிகளை இடிக்க உத்தரவிட்டுள்ளோம். இதுவரையில் 30க்கும் மேற்பட்ட சிம்னிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், எனக் கூறினர்.