ADDED : மார் 03, 2024 12:02 AM

பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் நேற்று முன்தினம் குண்டு வெடித்ததில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவின்படி, பெங்களூரு அருகே, தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி, டி.வி.எஸ்., பூனப்பள்ளி உட்பட மொத்தம், 16 சோதனை சாவடிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், விடிய விடிய போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
நேற்றும் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. கர்நாடகாவில் இருந்து வந்த வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. சந்தேகப்படும் நபர்களின் முகவரி மற்றும் மொபைல் எண் விபரங்களை போலீசார் சேகரித்தனர். அதேபோல, தமிழக எல்லையான ஓசூர் பகுதியிலுள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்களில் சோதனை செய்து, அங்கு தங்கியிருப்போர் விபரங்களை சேகரித்தனர்.
அதேபோல, நீலகிரியில், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய தமிழக -- கர்நாடகா எல்லையான கக்கநல்லா போலீஸ் சோதனை சாவடியில், கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார் பணிகளை ஆய்வு செய்தார்.

