வாக்காளர் பட்டியலில் வாழும் இறந்தவர்கள்: கட்சிகள் புகார்
வாக்காளர் பட்டியலில் வாழும் இறந்தவர்கள்: கட்சிகள் புகார்
ADDED : அக் 25, 2024 12:30 AM
சென்னை:'இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினால், தமிழகத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு நடக்கும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதன் விபரம்:
பா.ஜ., - கரு நாகராஜன்: வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. 25 சதவீத வாக்காளர்களின் பெயர்கள் தவறாக உள்ளன; அவற்றை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை கடைசி நேரத்தில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.
தி.மு.க., - ஆர்.எஸ்.பாரதி: வாக்காளர் பட்டியலில் இருக்கும் குளறுபடிகளை தி.மு.க., சுட்டிக் காட்டியதற்கு, இதுவரை தேர்தல் கமிஷன் செவி சாய்த்ததாக தெரியவில்லை. இறந்தவர்களின் பெயர்கள் அப்படியே உள்ளன.
லோக்சபா தேர்தலின் போது, அரசியல் கட்சிகளிடம் இருந்த பட்டியலுக்கும், தேர்தல் அதிகாரிகளிடம் இருந்த பட்டியலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.
குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் முறையாக திருத்தம் செய்தால், அதிகம் ஓட்டளித்தவர்கள் இருக்கும் மாநிலம் தமிழகம் தான் என்பது தெரியவரும்.
முறையான வாக்காளர் பட்டியல் இல்லாததால், ஓட்டுப்பதிவு குறைந்தது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
அ.தி.மு.க., - ஜெயகுமார்: ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் நடத்துகின்றனர்; ஆனாலும், குளறுபடிகள் தொடர்கின்றன. வாக்காளர் பட்டியலில், 234 தொகுதிகளிலும் இறந்தவர்கள் வாழ்கின்றனர்.
இதனால், கள்ள ஓட்டு போடும் சூழல் ஏற்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளிடம், இறந்தவர்களின் பெயர் பட்டியலை பெற்று, அவற்றை நீக்க வேண்டும். இரண்டு இடங்களில் ஓட்டுரிமை வைத்துள்ளவர்களையும் நீக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் - ரவீந்திரநாத்: தமிழகத்தில் 17 வயது நிரம்பியவர்களுக்கு,முன் கூட்டியே விண்ணப்பம் வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் போவதாக கூறியுள்ளனர்.
பள்ளிகளில் முகாம் நடத்தி, தகுதியுடைய மாணவர்களை பட்டியலில் சேர்க்க முயற்சி எடுக்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில், பட்டியலில் பெயர் விடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
29ல் வரைவு வாக்காளர் பட்டியல்
'தமிழகத்தில் வரும் 29ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக, வரும் 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் நவம்பர் 28 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.
அடுத்த மாதம் 16, 17, 23, 24ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இறுதி வாக்காளர் பட்டியல், 2025 ஜனவரி 6ல் வெளியிடப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் முகவர்களை நியமிக்கலாம். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு முகவர்கள் உதவலாம். வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்த, இடம்பெயர்ந்த வாக்காளர்கள் குறித்த விபரங்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.