வணிக நிறுவனங்களில் 'ஸ்மார்ட் மின் மீட்டர்' அமைக்க நவம்பர் வரை கெடு
வணிக நிறுவனங்களில் 'ஸ்மார்ட் மின் மீட்டர்' அமைக்க நவம்பர் வரை கெடு
ADDED : ஜூலை 03, 2025 10:10 PM
சென்னை:தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் திட்டத்தை, வரும் நவம்பருக்குள் முடிக்குமாறு, தமிழகத்துக்கு மத்திய மின் துறை கெடு விதித்துள்ளது.
ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மாநில மின் வாரியங்களுக்கு, மத்திய மின் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த மீட்டரில் கணக்கெடுக்க வேண்டிய தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, வாரிய அலுவலக, 'சர்வர்' உடன் இணைக்கப்படும்.
இதனால், அந்த தேதி வந்ததும் தானாகவே மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டு, நுகர்வோரின் மொபைல் போன் செயலிக்கு கட்டண விபரம் அனுப்பப்படும்.
தமிழகத்தில், தொழிற்சாலைகளை உள்ளடக்கிய, 11,500 உயரழுத்த மின் நுகர்வோர்கள் மற்றும் சென்னை தி.நகரில், 1.42 லட்சம் மின் இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், மாநிலம் முழுதும், 3.03 கோடி இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிக்கு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில், வரும் நவம்பருக்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளை முடிக்குமாறு, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு, மத்திய மின் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தாழ்வழுத்த பிரிவில், 37.55 லட்சம் வணிக மின் இணைப்புகளும், 3.40 லட்சம் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்புகளும் உள்ளன.